23 நாட்களில் 23 திருமணங்கள் பதிவு; லட்சங்களை வசூலித்த அதிகாரிகள்: அதிரடி காட்டியது லஞ்ச ஒழிப்புத்துறை

23 நாட்களில் 23 திருமணங்கள் பதிவு; லட்சங்களை வசூலித்த அதிகாரிகள்: அதிரடி காட்டியது லஞ்ச ஒழிப்புத்துறை

பதிவுத் திருமணத்திற்கு ஒரு லட்சம் எனப் பணம் பெற்றுக் கொண்டு திருமணம் பதிவு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகர் தலைமையில் ஏழு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையானது நேற்று இரவு 7.30 மணியிலிருந்து சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றது. இந்த அலுவலகத்தில் கடந்த 23 நாட்களில் வெளி மாநிலம், வெளிநாட்டினரைச் சார்ந்தவர்களின் 23 பதிவுத் திருமணங்கள் நடத்தப்பட்டன. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்திற்காக லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது பதிவுத்துறை அதிகாரி சந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத 2.26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பதிவுத் திருமணம் செய்ய ஒரு லட்சம் வாங்கியதாக பதிவுத் துறை அதிகாரிகள் மீது புகார் அளித்ததன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். இதுபோல் அவர்கள் பலரிடம் பணம் பெற்று முறைகேடாகப் பதிவுத் திருமணம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in