
சென்னையில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாததைக் கண்டித்த முதியவர் மீது சொகுசு கார் மோதும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. கார் ஓட்டுநரால் திட்டமிட்டு மோதி முதியவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே நகர் ராஜ மன்னார் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ரவிவர்மா(60). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் உஸ்மான் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே வரும் போது பின்னால் வந்த சொகுசு கார் ஓன்று ரவிவர்மாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரவிவர்மா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், உயிரிழந்த ரவிவர்மாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி் வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சம்சுதீன்(46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த கார் பிரபல டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமானது என்பதும், சம்சுதீன் அவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வருவது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் சம்சுதீன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கார் மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் காரை சம்சுதீன் ஓட்டி சென்றதும், அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த ரவிவர்மா கார் ஓட்டுநர் சம்சுதீனை கையைக் காண்பித்து திட்டுவது போன்றும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
பின்னர் கார் ஓட்டுநர் காரை வேகமாக ஓட்டிச் சென்று ரவிவர்மாவின் இருசக்கர வாகனம் மீது மோதியதால் நிலைதடுமாறி அவர் தடுப்புச் சுவர் மீது மோதி உயிரிழந்ததும் அதில் பதிவாகிவுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார், வேண்டுமென்றே காரை மோதி சம்சுதீன் விபத்தை ஏற்படுத்தினாரா அல்லது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுத்தினாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.