
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவரின் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவியேற்பு விழா நடந்து வருகிறது. இதில் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்றார், அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
முன்னதாக, விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. சிறுபான்மையினருக்கு எதிராக இருந்திருக்கிறார் என்பதுதான் விக்டோரியா கௌரியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என இந்த வழக்கின் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைக்குப் பின்னர், அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பிறகே கொலிஜியம் ஒருவரை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கும். நீதிபதிகளை அவர்களின் சமூக வலைத்தள பதிவுகளின் அடிப்படையில் பின்தொடரமுடியாது. மனுதாரர்கள் வைக்கும் கோரிக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாமலா இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நானே மாணவராக இருந்தபோது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். ஆனால் நீதிபதியாக என அரசியல் பார்வையை நான் இதுவரை வர விட்டதில்லை என நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார். அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது என நீதிபதி கன்னா தெரிவித்தார். இதன்பின்னர் இவ்வழக்கு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என நினைக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.