ஒருபக்கம் பதவியேற்றார்; மறுபக்கம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை: விக்டோரியா கவுரி விவகாரத்தில் நடந்தது என்ன?

விக்டோரியா கவுரி
விக்டோரியா கவுரிசென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றார்

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் பதவியேற்றனர். இந்த நிலையில் விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 5 கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனவரி 17-ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஒன்பது பேரை நியமிக்க  கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. 

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த பி. வடமலை, ஆர். கலைமதி,  கே.ஜி.திலகவதி ஆகிய மூவரையும், வழக்கறிஞர்களாக உள்ள வி.லக்‌ஷ்மி நாராயணன், எல். விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, ஆர். நீலகண்டன், கே.கே.ராமகிருஷ்ணன், ஜான் சத்யன் ஆகிய 6 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. 

இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரையும் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.

இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்களின் பதவி ஏற்பு மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்து, காலியிடங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைய உள்ளது.

உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விக்டோரிய கவுரியை கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் தள்ளுபடி செய்தனர். வழக்கின் வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முதல் ஆளாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in