
இந்தியாவில் BF.7 ஒமைக்ரான் திரிபுவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து விமான நிலையங்களையும் அலர்ட் செய்துள்ளது மத்திய அரசு.
சீனாவில் 2019-ம் ஆண்டு உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்தது. முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கரோனா தாக்கம் இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் சீனாவில் கரோனா பாதிப்பு திடீரென அதிகரித்தது. அங்கு பல நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சீனாவில் அதிவேகமாக கரோனா வைரஸ் பரவியதற்கு காரணமானதாக கருதப்படும் BF.7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத்தில் இரண்டு பேரும், ஒடிசாவில் ஒருவரும் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு விரைவாக காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும் தன்மை உடையது. இந்த வகை கரோனா வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வரக்கூடிய பயணிகளுக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் திரிபு குறித்தும் அதன் தன்மைகள் குறித்தும் கூடுதல் ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதி வேகமாக பரவும் ஒமைக்ரான் திரிபுவால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கவலையில் மக்கள் இருக்கின்றனர்.