கள்ளக்குறிச்சியில் டோல்கேட் ஊழியர்கள் தொடர்போராட்டம்: 2வது நாளாகவும் கட்டணம் வசூலிக்க ஆளில்லை

கள்ளக்குறிச்சியில் டோல்கேட் ஊழியர்கள் தொடர்போராட்டம்: 2வது நாளாகவும் கட்டணம் வசூலிக்க ஆளில்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சியில்  உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அந்த சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி மகிழ்ச்சியாக செல்கின்றன.

பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி  சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் உரிமம்  எஸ்.கே.எம்., காண்ட்ராக்டர் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்களை  வைத்து சுங்கச்சாவடிகளில்  கட்டண வசூல் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் பணியாற்றி வந்த தொழிலாளர்களில்  60 பேரை திடீரென நேற்று முதல் வேலைக்கு வர வேண்டாம் என்று நிர்வாகம் கூறிவிட்டது. 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாந்துறை மற்றும் செங்குறிச்சி ஆகிய சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் தொடங்கினர். அவர்கள் கட்டண வசூல் செய்யாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் நேற்று ஒரு நாள் முழுவதும் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடிகளை கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றன.

இந்த நிலையில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாகவும் இந்த இரண்டு இடங்களில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்றும் அங்கு கட்டண வசூல்  செய்யப்படவில்லை.  இதனால் இவ்வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாததால் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் தனியார் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in