ஸ்ரீரங்கத்தில் வேத, இதிகாச எரிப்பு போராட்டம் நடத்த அனுமதியில்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

ஸ்ரீரங்கத்தில் வேத, இதிகாச எரிப்பு போராட்டம் நடத்த அனுமதியில்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

ஸ்ரீரங்கத்தில் பெரியார் பிறந்த நாளான நாளை ‘வேத, இதிகாச எரிப்பு’ போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ரங்கராஜ நரசிம்மன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17-ல் (நாளை) தந்தை பெரியார் சிலை முன்பாக மனுதர்மம், வேதங்கள், ஆகமங்களை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் அதிகாரம் மற்றும் திக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் ரிக், யசூர், சாமா, அதர்வன வேதங்கள் மீது இந்து மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை கெடுப்பது ஆகும். இந்த போராட்டத்தால் ஸ்ரீரங்கத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், வேத, இதிகாச எரிப்பு போராட்டம் தொடர்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தலைமையில் செப்டம்பர் 8-ல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஒரு மதத்தினரையோ, அவர்களின் வழிபாட்டு முறைகளையோ, மத நம்பிக்கையோ அவமதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க வழங்க முடியாது. இதனால் போராட்டத்தை கைவிட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. போராட்டத்துக்கு அனுமதியும் வழங்கவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக கோட்டாட்சியர் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். போராட்டத்துக்கு போலீஸார் அனுமதியும் வழங்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களை தடுக்க வாய்ப்பிருப்பதாக மனுதாரர் அச்சம் தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்களுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in