வாங்கியவரிடம் வீட்டை ஒப்படைக்காமல் தொழிலதிபரை கடத்திய கும்பல்: விசிக நிர்வாகிகள் சிக்கினர்!

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

ஆட் கடத்தலில்  ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள்  கட்சியின்  சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சிதம்பரம் போலீஸார் அவர்களில்  மூவரை கைது செய்துள்ளனர்.

சென்னையில் வசிக்கும் காஜாமைதீன் (வயது 52)  என்பவரை அடையாளம் தெரிந்த  சிலர் கடத்தி வந்து சிதம்பரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காஜாமைதீன் மனைவி இணையவழி மூலமாக  தமிழக போலீஸாருக்கு புகார் அளித்தார். அதன் பேரில் சென்னை நீலாங்கரை போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிதம்பரம் பகுதிக்கு உட்பட்டதால் உடனடியாக வழக்கை சிதம்பரம் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

இதனையடுத்து, சிதம்பரம் போலீஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன் சிக்னல் மூலமாக காஜாமைதீனை கடத்தியவர்கள் இருக்கும் இடம் கண்டறிந்து சென்று காஜாமைதீனை மீட்டனர். அத்துடன் அங்கிருந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், ஜமாலுதீன், விஜயபாஸ்கர் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில் மேலும் இதில்  தொடர்புடைய  செந்தில், நடனம், நடராஜ், ரவீந்திரன் உள்ளிட்ட  9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

போலீஸாரின் விசாரணையில்  சிதம்பரம் வடக்கு ரதவீதி கே.கே.சி தெருவில் வசித்து வரும் ஜமாலுதீன் என்பவருக்காக  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காஜாமைதீனை கடத்தியது தெரிய வந்திருக்கிறது. ஜமாலுதீன் தனக்கு சொந்தமான வீட்டை காஜாமைதீனிடம் விற்றதாகவும்,  அதன் பிறகு வீட்டை அவரிடம் ஒப்படைக்காமல் அதே வீட்டை  புதுவையை சேர்ந்த வேறொருவருக்கு அதிக விலைக்கு விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால் காஜாமைதீனிடம் விற்ற வீட்டை தன்னிடமே திரும்ப கொடுக்குமாறு ஜமாலுதீன் கேட்டிருக்கிறார்.  அதற்கு காஜாமைதீன் மறுக்கவே அவரை ஆள் வைத்து  கடத்தியிருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆட்கடத்தல் புகாரில்  விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in