‘ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்’ திருமாவளவன் வலியுறுத்தல்!

திருமாவளவன்
திருமாவளவன்

‘கோகுல்ராஜ் கொலை வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நேரத்தில், தமிழக அரசு ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை இயற்ற முன்வர வேண்டும்’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘’ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் 300 பேர் பலியாகியுள்ள சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், தொழில்நுணுக்கங்கள் வளர்ந்துள்ள நிலையில் நடந்துள்ள இந்த விபத்தின் மூலம் இந்திய ஆட்சியாளர்களின் நிர்வாகத்திறனில் உள்ள பலவீனம் வெளிப்பட்டுள்ளது.

விபத்துகளை தடுக்க கூடிய கவாச் பாதுகாப்பு கருவியை முழு அளவில் பயன்படுத்தியிருந்தால் இந்த விபத்தினை தடுத்திருக்கலாம். இந்திய ஆட்சியாளர்கள் மக்கள் நலன், பாதுகாப்பு போன்றவற்றில் அக்கறை காட்டுவதை விட வெறுப்பு அரசியலை மேற்கொள்வதிலேயே அக்கறை கொண்டுள்ளனர். மேலும் அரசுத்துறைகளை தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகளால், ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவில்லை. தேவையான பணியாளர்களை நியமித்திருந்தால் இத்தகைய விபத்தினை தடுத்திருக்கலாம். எனவே இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ரயிவே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தபட்டவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் தமிழக அரசு ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை இயற்ற முன்வர வேண்டும்.

திருமோகூரில் நடந்த சம்பவத்தில் சாதி வெறி பிடித்தவர்கள் தலித் மக்கள் குடியிருப்புகளில் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 3 பேர் தலைக்காயம் அடைந்துள்ளனர். பலரது வீடுகள்,வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இதில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மேலும் மதுரை மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடந்த 10-க்கும் மேற்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து வரும் 12-ம் தேதி மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in