32 ஆண்டுகளுக்கு முன் நடந்த காங்.தலைவர் கொலை வழக்கு: உ.பி கேங்க் ஸ்டாருக்கு ஆயுள் தண்டனை!

கேங்க் ஸ்டார் முக்தார் அன்சாரி.
கேங்க் ஸ்டார் முக்தார் அன்சாரி.32 ஆண்டுகளுக்கு முன் நடந்த காங்.தலைவர் கொலை வழக்கு: உ.பி கேங்க் ஸ்டாருக்கு ஆயுள் தண்டனை!

வாரணாசியில் காங்கிரஸ் தலைவர் அவதேஷ் ராய் கொலை வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், உ.பி கேங்க் ஸ்டாருமான முக்தார் அன்சாரிக்கு ஆயுள்தண்டனை விதித்து எம்.பி, எம்எல்ஏ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கடந்த 1991 ஆகஸ்ட் 3-ம் தேதி காங்கிரஸ் தலைவர் அவதேஷ் ராய் மற்றும் அவரது சகோதரர் முன்னாள் எம்எல்ஏ அஜய் ராய் ஆகியோர் வீட்டிற்கு வெளியே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த மர்மநபர்கள் அவர்கள் இருவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவதேஷ் ராய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், உ.பியின் பிரபல தாதாவுமான முக்தார் அன்சாரி, பீம்சிங், கமலேஷ் சிங், ராகேஷ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அப்துல் கலாம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கமலேஷ் மற்றும் அப்துல் கலாம் ஆகிய இருவர் இறந்து விட்டனர். அரசியல் தலையீடு காரணமாக இவ்வழக்கு சிபிசிஐடியால் விசாரிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கின் தீர்ப்பை மே 22- ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது. பண்டா சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த வாரணாசி எம்.பி, எம்எல்ஏ நீதிமன்றம், முக்தார் அன்சாரிக்கு ஆயுள்தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

" இது பட்டப்பகலில் நடந்த கொலை. முக்தார் அன்சாரிக்குப் பயப்படாமல் கொலையை நேரில் பார்த்த 2 சாட்சிகள் தங்கள் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் அளித்தனர்" என அஜய்ராய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

"இந்தப் போரில் எங்களுக்கு ஆதரவாக நின்ற மக்களும், எங்களுடைய 32 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பின் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு பாஜக அரசு தான் பொறுப்பு " என்று கொலை செய்யப்பட்ட அவதேஷ் ராய் சகோதரர் அஜய்ராய் கூறினார்.

பாஜக எம்எல்ஏ கிருஷ்ணாந்த் ராய் கொலை உள்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள கேங்க் ஸ்டாரான முக்தார் அன்சாரி, ஆள்கடத்தல், கொலை, கடத்தல் உள்பட பல்வேறு சம்பவங்களால் உத்தரப்பிரதேசத்தில் பிரபலமானவர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முக்தாருக்கு, கடந்த 2007-ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்ட வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதத்தையும் காஜிபூர் நீதிமன்றம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in