திருடுபோன பைக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்ட மெசேஜ்: சுதாரித்துக் கொண்ட உரிமையாளருக்குக் காத்திருந்த ஷாக்!

திருடுபோன பைக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்ட மெசேஜ்: சுதாரித்துக் கொண்ட உரிமையாளருக்குக் காத்திருந்த ஷாக்!

ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன இருசக்கர வாகனத்தை,  ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதித்து  காவல்துறை அனுப்பிய குறுந்தகவலால் அது இருக்கும் இடத்தை  கண்டுபிடித்துள்ள  சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை  அடுத்த வேட்டைக்குடி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (40). விவசாயக் கூலி தொழிலாளியான அவரது டிஎன் 91 டி 1143 என்ற பதிவு எண் கொண்ட டிவிஎஸ் அப்பாச்சி இரு சக்கர வாகனம் கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி இரவு, விருத்தாசலம் சாவடி குப்பத்தில் உறவினர் இல்லத்தில் நிறுத்தியிருந்தபோது திருடு போனது. இதுகுறித்து, வெற்றிவேல் விருத்தாசலம் காவல் துறையினரிடம் புகார் அளித்து மனு ரசீதும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் அவரது செல்போனுக்கு நாகப்பட்டினம் மாவட்ட போலீஸார் அனுப்பிய  குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தனக்கு இப்படி ஒரு உதவியை காவல் துறை செய்யும் வெற்றிவேல் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அந்த தகவல் மூலம் தன்னிடம் இல்லாத இருசக்கர வாகனத்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் யாரோ பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொண்ட வெற்றிவேல் உடனடியாக தனது நண்பர்களுடன் கிளம்பி நாகப்பட்டினம் பகுதிக்கு வந்து அபராதம் விதித்த காவல்துறையை அணுகினார்.

வேதாரண்யம் அருகே வாய்மேடு பகுதியில் அந்த இருசக்கர வாகனம் இயங்கிக் கொண்டிருப்பது போலீஸார் மூலம் தெரிய வந்ததையடுத்து அப்பகுதியில் சென்று விசாரித்து கண்காணித்தபோது  வாய்மேடு காவல் நிலைய காவலர் ஒருவரே அதனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இருசக்கர வாகனத்தை காவலர் ஓட்டி செல்வதை புகைப்படம் எடுத்துக் கொண்ட வெற்றிவேல் நேராக தஞ்சாவூர் சென்று தஞ்சாவூர் சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

திருடு போன இரு சக்கர வாகனம் வாய்மேடு காவல் நிலைய காவலருக்கு எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி முறைப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெற்றிவேல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in