வைகை அணையில் மீன்வளர்ப்பு கண்மாய் குத்தகை ஏலத்தில் மோதல்: மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கோப்பு படம்
கோப்பு படம்

வைகை அணை 10 கண்மாய்களுக்கான மீன் வளர்ப்பு  குத்தகை ஏலம் எடுப்பதில்  மோதல் ஏற்பட்டதால், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தேனி மாவட்டம் வைகை அணை பகுதியில் உள்ள  குள்ளப்புரம் சிறுகுளம் கண்மாய், கீழ வடகரை பட்டத்திக்குளம் , பெரியகுளம் வடகரை கடம்பன் குளம் , சின்ன பூலாங்குளம் , வேலன் குளம்,  ஜெயமங்கலம்  புதுக்குளம், தென்கரை பாப்பையன்பட்டி குளம், வடவீரநாயக்கன்பட்டி பூவாலசேரி கண்மாய், மேல்மங்கலம் நெடுங்குளம் கண்மாய், தாமரைக்குளம் கண்மாய் ஆகிய  கண்மாய்களில் மீன் வளர்ப்பு  குத்தகை ஏலம்  வைகை அணை மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்க  ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் மீன்வளத்துறை  அலுவலகம்  குவிந்தனர். இவர்களில் 837 பேர் குத்தகை உரிமத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் உடன் வந்திருந்தனர். ஆட்கள் அதிகரித்ததால், ஏராளமான போலீஸார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர்.  

கண்மாய்களை மாதக் குத்தகை கணக்கில்  ஏலம் விட மீன்வளத் துறையினர் முடிவு செய்திருந்தனர்.  வேலன்குளம் கண்மாய் முதலாவதாக  ஏலமிட முடிவு செய்யப்பட்டது.  ஏலம் எடுக்க வந்தவர்கள் இடையே முரண்பாடு நிலவியது. இதனால், வேலன் கண்மாய் ஏலம் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து சிறுகுளம் கண்மாய் ஏலமிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த  கண்மாய்க்கு மட்டும் நூற்றுக்கும்  மேற்பட்டோர் ஏலம் எடுக்க முன்வந்தனர். இவர்களிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படாததால், ஏலம் எடுப்பதில் தாமதம் நிலவியதால் ஏலம் ஒத்தி  வைக்கப்படுவதாக மீன் வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதனால்,  ஏலம் எடுக்க வந்தவர்கள் இடையே  சலசலப்பு ஏற்பட்டு மோதல்  உருவானது. இதனால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in