இந்தியாவில் தயாரான இருமல் சிரப்பை குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் மரணம்: அடுத்தடுத்து அதிர்ச்சி!

இந்தியாவில் தயாரான இருமல் சிரப்பை குடித்த 18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் மரணம்: அடுத்தடுத்து அதிர்ச்சி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே காம்பியா நாட்டில் இந்தியாவில் தயாரான இருமல் மருந்தினை அருந்திய 66 குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டியது.

இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை உட்கொண்டதால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் இந்தியா விசாரணையைத் தொடங்கியுள்ளது. மாதிரிகள் சோதனை செய்யப்படும் வரை மருந்து நிறுவனத்தின் நொய்டா பிரிவில் இருமல் சிரப்பின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சக அறிக்கையின்படி, சிரப்களின் ஆய்வக சோதனைகளில் "எத்திலீன் கிளைகோலின்" எனப்படும் நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது என கூறப்பட்டுள்ளது. மேலும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே, பெற்றோர் அல்லது மருந்தாளுனர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைகளுக்கு வழக்கமான அளவைத் தாண்டிய டோஸ்களில் இந்த சிரப் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள், மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்பு, 2-7 நாட்களுக்கு வீட்டில் இந்த இருமல் சிரப்பை 2.5 முதல் 5 மில்லி அளவுகளில் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை எடுத்துக்கொண்டது கண்டறியப்பட்டது. இது வழக்கமான அளவை விட அதிகம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

18 குழந்தைகளின் மரணத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களிலிருந்தும் Doc-1 Max மாத்திரைகள் மற்றும் சிரப்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும் நிலைமையை சரியான நேரத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கத் தவறியதால் ஏழு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ - வடக்கு மண்டலம்) மற்றும் உத்தர பிரதேச மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் ஆகிய குழுக்களால் இது தொடர்பாக கூட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in