
கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக சொல்லப்படும் நொய்டாவைச் சேர்ந்த இருமல் சிரப் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்களை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் கடந்த ஆண்டு 18 குழந்தைகளின் மரணத்திற்கு நொய்டாவைச் சேர்ந்த இருமல் சிரப் வழிவகுத்ததாக அந்நாட்டு அரசால் குற்றம்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியது. இந்த சூழலில், தற்போது அந்த மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று ஊழியர்களை நொய்டா காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) மருந்து ஆய்வாளரின் புகாரின் பேரில், சிரப் தயாரிப்பு நிறுவனமான மரியான் பயோடெக்கின் இயக்குநர்கள் இருவர் உட்பட, ஐந்து அதிகாரிகள் மீது வியாழக்கிழமை இரவு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மற்றும் உத்தரபிரதேச மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரிகள் மரியான் பயோடெக் மருந்துகளின் மாதிரிகளை சரிபார்த்து, அவற்றில் 22 மருந்துகள் தரமானதாக இல்லை (கலப்படம் மற்றும் போலியானது) என புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாகப் பேசிய நொய்டா ஸ்டேஜ் 3 காவல் நிலையத்தின் பொறுப்பாளர் விஜய் குமார், "எப்ஐஆரில் பெயரிடப்பட்டுள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் தலைமறைவாக உள்ளனர். தலைமை இயக்குநர் துஹின் பட்டாச்சார்யா, உற்பத்தி வேதியியலாளர் அதுல் ராவத், பகுப்பாய்வு வேதியியலாளர் மூல் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்