‘என்னைக் கடத்திவிட்டார்கள்... பணம் அனுப்புங்கள்’ - இந்தியாவிலிருந்து பெற்றோரை ஏமாற்றிய அமெரிக்கப் பெண்

‘என்னைக் கடத்திவிட்டார்கள்... பணம் அனுப்புங்கள்’ - இந்தியாவிலிருந்து பெற்றோரை ஏமாற்றிய அமெரிக்கப் பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த க்ளோயி மெக்லாக்லின் எனும் 27 வயதுப் பெண், மே 3-ல் டெல்லி வந்தார். அங்கு உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருப்பதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் அனுப்பினார். அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரியின் மகளான க்ளோயி, தலைநகர் வாஷிங்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றவர், இசையில் ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில், ஜூலை 7-ம் தேதி அமெரிக்காவில் உள்ள தனது தாயிடம் செல்போனில் பேசிய க்ளோயி, தனக்கு அறிமுகமான ஒருவர் தன்னைக் கடத்திவிட்டதாகவும், பணம் கேட்டு தன்னை அடிப்பதாகவும் கூறினார். இதனால் பதற்றமடைந்த அவரது தாய், உடனடியாக டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.

ஜூலை 10-ல், மீண்டும் தனது தாயை வாட்ஸ்-அப் வீடியோ காலில் தொடர்புகொண்ட க்ளோயி தனது நிலை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த அறைக்குள் ஒருவர் நுழைவது தெரிந்தது. உடனே அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் யாரோ ஒரு நபரால் முடக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கத் தூதரக அலுவலக அதிகாரிகள் ஊகித்தனர்.

இந்தக் களேபரங்களுக்கு நடுவில், யாஹூ.காம் தளம் வழியாக அமெரிக்கக் குடியுரிமை சேவைப் பிரிவுக்கு, ஜூலை 9-ல் க்ளோயி மின்னஞ்சல் அனுப்பியிருந்தது கண்டறியப்பட்டது. அந்த மின்னஞ்சலில், கிரேட்டர் நொய்டா பகுதியில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, அவர் தங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட ஹோட்டலில் ஆய்வுசெய்த போலீஸார், அந்தப் பெயரில் அங்கு யாரும் அறை எடுத்துத் தங்கவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.

தொடர் விசாரணைகளுக்குப் பின்னர், அந்தப் பெண் குருகிராமில் தங்கியிருக்கும் ஓகோரோஃபோ சிபுய்கே ஓகோரோ(31) எனும் நபரின் வைஃபை வசதியைப் பயன்படுத்தி வீடியோ காலில் தனது தாயை க்ளோயி தொடர்புகொண்டு பேசியது தெரியவந்தது. நைஜீரியாவைச் சேர்ந்த ஓகோரோவும் இசைக் கலைஞர்தான்.

இதையடுத்து, இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கின. க்ளோயியும் ஓகோரோவும் ஃபேஸ்புக் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். இருவரும் பாடகர்கள் என்பதால், இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது.

இந்தியாவில் தங்கியிருக்கும் ஓகோரோவைச் சந்திக்கவே க்ளோயி டெல்லி வந்தார். கிரேட்டர் நொய்டாவில் ஒரு குடியிருப்பில் வாடகை வீடு எடுத்தார். எனினும் குருகிராமில் ஓகோரோவுடன் தங்கியிருந்தார். கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டார். மேலும், ஜூன் 6-ல் அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியாகின. அவரது நண்பர் ஓகோரோவுக்கும் அதே நிலை ஏற்பட்டது.

இதையடுத்தே, தன்னை யாரோ கடத்திவிட்டதாக ஏமாற்றி தனது பெற்றோரிடமிருந்து பணம் பறிக்க க்ளோயி திட்டமிட்டார். அதில் ஓகோரோ உடந்தையாக இருந்தார். இந்தத் தகவல்கள் தெரியவந்ததும், க்ளோயி கைதுசெய்யப்பட்டார். உரிய பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியதாக இருவர் மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in