இந்தியாவில் கொலைக் குற்றங்களில் உ.பி முதலிடம்: தற்கொலையில் தமிழகத்திற்கு 2-வது இடம்

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலை, விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தற்கொலை சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் பலியானோா் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 60,96,310 மொத்த குற்றங்கள் நடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மொத்த கொலைகள் 29,272. இதில் மாநில வாரியாக கொலைகள் நடந்த மாநிலங்களில் 3,717 எண்ணிக்கையைப் பெற்று உத்தரப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. பிஹாரில் 2,799, மகாராஷ்டிரத்தில் 2,330, மத்தியப் பிரதேசத்தில் 2,034, மேற்கு வங்கத்தில் 1,884, தமிழகத்தில் 1,686 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 1,49,404 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதில் முதல் 5 இடங்களில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதன்படி மத்திய பிரதேசம் 19,173, மகாராஷ்டிரம் 17,261, உத்தர பிரதேசம் 16,838, மேற்கு வங்கம் 9,523, ஒடிசா 7,899, தமிழகம் 6,064 என்ற அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த ஆண்டு நாட்டில் பெண்களுக்கு எதிராக மொத்தம் 4,28,278 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதிலும் உத்தரப் பிரதேசம் மாநிலம் தான் மிக மோசமான நிலையில் உள்ளது. அதன்படி

மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் 56,083, ராஜஸ்தான் 40,738, மகாராஷ்டிரம் 39,526, மேற்கு வங்கம் 35,884, ஒடிசா 31,352, தமிழகம் 8,501.

கடந்த ஆண்டு நாட்டில் 293 பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை/ கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதன்படி உத்தரப் பிரதேசம் 48, அஸ்ஸாம் 47, மத்தியப் பிரதேசம் 38, மகாராஷ்டிரம் 23, ஜாா்க்கண்ட் 22, தமிழகம் 5 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,64,033 தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் அதிக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலத்தில் மகாராஷ்ட்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிரம் 22,207, தமிழகம் 18,925, மத்தியப் பிரதேசம் 14,965, மேற்கு வங்கம் 13,500, கா்நாடகம் 13,056.

இதே போல கடந்த ஆண்டு நாடு முழுவதும் சுமாா் 4,22,659 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 1,73,860 லட்சம் போ் மரணமடைந்தனா். இந்த விபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் 24,711 விபத்துகள் நடைபெற்றுள்ளன. தமிழகம் 16,685, மகாராஷ்டிரம் 16,446, மத்தியப் பிரதேசம் 13,755, ராஜஸ்தான் 10,698 என விபத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற விபத்துகளின் எண்ணிக்கை 46,443 ஆக இருந்தன. இது கடந்த ஆண்டு 57,090 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in