
ஆலங்கட்டி மழை பெய்த போது விழுந்த ஐஸ் கட்டியால் ஸ்பெயினில் 20 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியான கேட்டாலோனியாவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் 4 அங்குலவிட்டத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால், நடந்து சென்றவர்கள் படுகாயமடைந்தனர். பத்து நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த மழையால் 50-க்கும் மேற்பட்டோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படுகிறது. கற்களைப் போல விழுந்த ஆலங்கட்டிகளால் வீடுகளின் மேற்கூரைகள், மின் கேபிள்கள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. ஆலங்கட்டி விழுந்ததில் ஜிரோனா என்ற 20 மாத குழந்தையின் மண்டை உடைந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தது.
ஆலங்கட்டி மழை பெய்தது குறித்து இசைக்கலைஞர் சிகஸ் கார்பனெல் கூறுகையில்," ஆலங்கட்டி மழை பெய்யவும் மக்கள் கூச்சலிடவும், ஒளிந்துகொள்ளவும் தொடங்கினர். டென்னிஸ் பந்துகள் அளவில் விழுந்த ஆலங்கட்டியால் சாலையில் சென்ற பலர் படுகாயமடைந்தனர். கார் கண்ணாடிகள் உடைந்தன" என்றனர்.
ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியான கேட்டாலோனியாவில் மார்ச் மாதம் ஆலங்கட்டி மழை பெய்வது வழக்கம். ஆனால், இந்த அளவிற்கு பெரிய ஆலங்கட்சிகள் பலத்த காற்றுடன் தாக்கியது 2002-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே தாக்கிய ஆலங்கட்டி மழையில் இருந்து மக்கள் மீளாத நிலையில், மீண்டும் பலத்த ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் உள்ளூர் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.