`பாடத்தை விளக்க வேண்டும், என் அறைக்கு வா'- சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சிக்கிய பின்னணி!

பதிவாளர் கோபி
பதிவாளர் கோபி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றி வரும் கோபி என்பவர் அப்பல்கலையில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் கோபி ( 45). இவர் கடந்த மே மாதம் முதல் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரிடம் பல மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்கள். அவர்களில் சேலம் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த மாணவியும் ஒருவர்.

கடந்த ஞாயிறன்று அந்த சேலம் மாணவியை தொடர்பு கொண்ட பேராசிரியர் கோபி, ஆராய்ச்சி மேற்படிப்பு பாடம் தொடர்பாக முக்கியமான விளக்கங்களை கூற வேண்டியிருப்பதால் உடனடியாக புறப்பட்டு பெரியார் பல்கலைக்கழக விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவி தனது உறவினர்கள் சிலருடன் புறப்பட்டு பதிவாளர் கோபி தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றார். உறவினர்கள் வெளியே காத்திருக்க மாணவி மட்டும் விடுதிக்குள் சென்று பதிவாளர் கோபியை சந்தித்தார்.

அப்போது, பதிவாளர் கோபி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்து அழுதுகொண்டே வெளியே வந்த அந்த மாணவி வெளியில் இருந்த உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த உறவினர்கள் உள்ளே புகுந்து கோபியை சராமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் நேராக சென்று பல்கலைக்கழகம் இருக்கும் கருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று கோபி மீது புகார் அளித்தனர்.

இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான கோபி சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் அவரும், மாணவியுடன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இரண்டு புகார்களையும் விசாரித்த காவல் துறையினர், ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை மற்றும் பெண்களை சீண்டுதல், தொடர்ந்து தொல்லை தருதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபியை நேற்று மாலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து உயர் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தியபின் கைது செய்தனர்.

பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு கரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in