சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க என்ன படித்திருக்க வேண்டும்?- தெளிவுப்படுத்திய உயர்நீதிமன்றம்

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க என்ன படித்திருக்க வேண்டும்?- தெளிவுப்படுத்திய உயர்நீதிமன்றம்

பத்தாம் வகுப்புக்குப்பின் டிப்ளமோ முடித்து, பொறியியல் படித்தவர்களும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கும்படி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு,  பட்டப்படிப்பு முடித்திருக்க  வேண்டும் என இந்திய பார் கவுன்சில் அறிவித்திருந்தது. ஆனால்  பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும்  விண்ணப்பிக்க அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்க பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு  படிக்காமல், டிப்ளமோ முடித்து, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப் படவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த கோமதி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்திய பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிப்ளமோ படிப்பை முடித்து, பொறியியல் பட்டம் பெற்றவர்களும், மூன்றாண்டு சட்டப்படிப்பு படிப்பதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என  பார் கவுன்சில் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி, இனி வரும் ஆண்டுகளில் சட்டப்படிப்பு தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில், பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ படித்து மூன்றாண்டுகள் பொறியியல் படித்தவர்களும் மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கும்படி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in