தமிழகத்தில் மருத்துவ இடங்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மருத்துவ இடங்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ இடங்கள் 11,275 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ``மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.  இதன் மூலம் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது.  2014-ம் ஆண்டில் 377 ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 655 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்தம் 69 சதவீத உயர்வாகும்.  இதேபோல், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 95 சதவீதம் அதிகரித்திருக்கிறது.   அதாவது 2014-ம் ஆண்டிற்கு முன்பு, 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை தற்போது 1,00,163 ஆக அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் மருத்துவ முதுகலைப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையும் 110 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ இடங்கள் 11,275 ஆக உள்ளது.  அதேபோல் முதுகலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 4935 ஆக உள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் சிஎஸ்எஸ் (மத்திய அரசின் நிதித்திட்டம்) திட்டத்தின்படி,  செயல்பாட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

இதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசின் பங்களிப்பாக 90 சதவீத உதவியுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in