கேரளாவில் அண்மையில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஆரஞ்சு நிறத்தில் இருந்ததால் விமர்சிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புது விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்பட்ட பல வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயிலின் நிறம் நீலம், வெள்ளையாக இருந்து வந்த நிலையில், சோதனை முறையில் அதனை மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, பாரத் ரயில் வெள்ளையிலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது.
நிற மாற்றம் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், மூவர்ண கொடியில் உள்ள ஆரஞ்சு நிறத்தால் ஈர்க்கப்பட்டு, வந்தே பாரத் மாற்றம் செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்நிலையில், அண்மையில் கேரளாவில் தொடங்கப்பட்ட சேவையிலும் ரயில் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.
இது விவாதப் பொருளாக மாறிய நிலையில், தற்போது அமைச்சர் புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, ஆரஞ்சு நிறம் கண்களுக்கு நன்றாக தெரியும் என்பதாலேயே, வந்தே பாரத் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டதாக கூறியுள்ளார். ஐரோப்பாவில் பல ரயில்கள் இதே நிறத்தில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.