வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்புகள்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை!

வெப்ப அலை
வெப்ப அலை

வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்புகளின் போது பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வயதானவர்கள் வெயிலில் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக வெப்ப அலையால் தாக்கப்பட்டு திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இது போன்ற உயிரிழப்புகளின் போது பிரேத பரிசோதனைக்கு பிறகு சம்பந்தப்பட்டவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாறு பிரேத பரிசோதனை செய்யும் போது அதில் போதிய தகவல்கள் இருப்பதில்லை என்ற கருத்து மருத்துவத் துறையில் நிலவி வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

உயிரிழந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவை நோயியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது, அதில் முழுமையான முடிவுகள் தெரிய வருவதில்லை எனவும் மருத்துவத்துறையினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தேசிய திட்டம் (NPCCHH) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாடு மையம் (NCDC) ஆகியவை மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பிரேத பரிசோதனை
பிரேத பரிசோதனை

இந்த வழிகாட்டு நெறிமுறைகள், மருத்துவமனைகள் மரணத்தை வெப்பம் தொடர்பான உயிரிழப்பு என்று முடிவு செய்வதற்கான அளவுகோல்களை அறிந்து கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் சான்றுகள் அடிப்படையிலான மருத்துவ முடிவு எடுக்கும் செயல்முறைகளையும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்துகிறது. வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனை நடத்துவது என்பது, மரணத்தின் சூழ்நிலை, இறந்தவரின் வயது, கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடலில் இருந்து சேகரிக்கப்படும் திசுக்கள் மற்றும் திரவங்கள் நச்சுயியல் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள வாய்ப்பை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 1991-2000 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2013 முதல் 2022-ம் ஆண்டுக்குள் 85 சதவீதம் அளவிற்கு வெப்ப அலையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் 2050-ம் ஆண்டுக்குள் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 370 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in