நித்தியானந்தா சிஷ்யைகள் புலம்பலை புறந்தள்ளியது ஐ.நா!

ஐநா கூட்டத்தில் நித்தியானந்தா பிரதிநிதி
ஐநா கூட்டத்தில் நித்தியானந்தா பிரதிநிதி

ஐநா சபைக் கூட்டம் ஒன்றில் கடந்தவாரம் பங்கேற்ற நித்தியானந்தா சிஷ்யைகள் சிலர், தொடர்பற்ற வகையில் பேசியதை புறக்கணிப்பதாக ஐநா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாமி நித்தியானந்தாவுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு பாலியல் மற்றும் ஆட்கடத்தல் புகார்கள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றில் இருந்து தப்பிப்பதற்காக சட்டவிரோதமான வழியில் இந்தியாவை விட்டு ஓடியவர், தற்போது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஈகுவடார் தீவுகளில் ஒன்றை வாங்கி அங்கே முகாமிட்டுள்ளார்.

கைலாசா என்ற ஒரு தேசத்தை அங்கே நிர்மாணித்திருப்பதாகவும், இறையாண்மை மிக்க ஒரு தேசத்துக்கான அனைத்தும் அங்கே செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்வப்போது நித்தியானந்தா சார்பில் தகவல்கள் வெளியாகும். இடையில் ஒரு முறை உடல்நலக்கோளாறு காரணமாக செத்துப் பிழைத்த நித்தி, தற்போது முன்னைக்காட்டிலும் வேகமாக செயல்பட்டு வருகிறார்.

ஐநாவில் கைலாசா பிரதிநிதி ஒருவர்
ஐநாவில் கைலாசா பிரதிநிதி ஒருவர்

ஆன்லைன் வாயிலான சத்சங்க கூட்டங்கள், ஆன்மிக உரைகள், அருளாசிகள் ஆகியவற்றோடு, அபிமானிகள் மத்தியிலிருந்து ஆன்லைன் வாயிலாகவே நிதி சேகரித்தும் வருகிறார் நித்தியானந்தா. அவ்வப்போது கைலாசா ’நாட்டின்’ இறையாண்மையை உலகுக்கு பறைசாற்றுவதாக, அதிரடிகளையும் தனது அடிவருடிகள் வாயிலாக செயல்படுத்தி வருவார்.

அப்படி அண்மையில் அமெரிக்காவின் மாகாண ஒன்றின் மேயர் உதவியுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அதன் வாயிலாக, கைலாசாவை அமெரிக்க ஐக்கிய நாடுகள் அங்கீகரத்ததாக புரளி கிளப்பினார். அடுத்தபடியாக, ஐநாவின் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நித்தியின் சிஷ்யைகள், கூட்டத்துக்கு சற்றும் பொருந்தாத கருத்துக்களை பேசியது சர்ச்சையை கிளப்பியது.

ஐநாவில் நித்தி சிஷ்யைகள்
ஐநாவில் நித்தி சிஷ்யைகள்

ஐ நா அமைப்பின் சார்பிலான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குழு கூட்டம் ஒன்று ஜெனீவாவில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எவர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பதால், ஐநாவுக்கான கைலாசாவின் நிரந்தர பிரதிநிதிகள் என்ற பெயரில் சில பெண்கள் பங்கேற்றனர். கைலாசா குறித்தும், நித்தியானந்தாவை முன்னிறுத்தியும் அவர்கள் அங்கே சில கருத்துக்களை முன்வைத்தனர்.

இது தொடர்பாக பின்னர் கருத்து தெரிவித்த ஐநா அதிகாரிகள், ‘கூட்டத்துக்கு சற்றும் பொருந்தாத விதத்தில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை புறக்கணிக்கிறோம்’ என்று தெரிவித்தனர். ஆனபோதும், ஐநா கூட்டம் ஒன்றில் பங்கேற்றதை முன்வைத்து, கைலாசாவுக்கான அங்கீகாரத்தை ஐநா வழங்கிவிட்டது போன்று நித்தியானந்தாவின் சிஷ்யகோடிகள் வழக்கம்போல புரளி கிளப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in