
கடலூர் மாவட்டம், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஒருவர் அவரது பிறந்த நாளான நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் ஏ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் மகன் பாஸ்கர் ( 36). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவருக்கு பிறந்த நாள். ஆனாலும் விடுப்பு எதுவும் எடுக்காமல் வழக்கம்போல் இயல்பாக நேற்று பணிக்கு வந்திருந்தார்.
மதியம் வரை தனது பணிகளை மேற்கொண்டவர் பின்னர் மதிய உணவுக்காக தான் வசித்து வரும் உளுந்தூர்பேட்டை பச்சையப்பா நகரில் உள்ள வாடகை வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றவர் வீட்டு மாடியில் உள்ள கொட்டகைக்கு சென்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையிலான போலீஸார் பாஸ்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது செல்போனை கைப்பற்றி அதில் அவருக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கரின் தற்கொலைக்கு காரணம் பணி சுமையா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது பிறந்த நாள் அன்று போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.