வேளாண் ஏற்றுமதி: போர்ச் சூழலுக்கு நடுவே புதிய வாய்ப்புகள்!

வேளாண் ஏற்றுமதி: போர்ச் சூழலுக்கு நடுவே புதிய வாய்ப்புகள்!

கோவிட்-19 பெருந்தொற்று உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டபோதும் இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய சேதாரம் இல்லாமல் தப்ப உதவியது இந்திய வேளாண்மைத் துறை. ஒரு காலத்தில் உணவு தானிய இறக்குமதிதான் பஞ்சத்தைப் போக்கும் என்றிருந்த நிலை மாறி, பசுமைப் புரட்சிக்குப் பிறகு உணவு தானிய விளைச்சலில் தன்னிறைவை எட்டியது இந்தியா. இப்போது பாஸ்மதி அரிசி, கோதுமை, சோளம், சர்க்கரை போன்றவற்றைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவற்றில் உபரி உற்பத்தி கிடைக்கிறது.

இன்னமும் பனை எண்ணெய் போன்றவற்றை அதிகம் இறக்குமதி செய்துதான் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறோம். இதை மாற்ற இந்தியாவிலேயே எண்ணெய் வித்துகளின் சாகுபடிக்கு அரசு புதிய திட்டங்களை வகுத்திருக்கிறது. பயிர் சுழற்சி முறையை விவசாயிகள் கடைப்பிடித்தால் புன்செய் தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் சாகுபடியும் இங்கே வேகம் பெறும்.

உக்ரைன் போர்

உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் ராணுவத் தாக்குதல்களால் உலகம் பெருமளவுக்கு பாதிப்பு அடைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளும் கோதுமை, பார்லி உள்ளிட்ட தானியங்களுக்கு ரஷ்யா, உக்ரைனைத்தான் இதுவரை நம்பியிருக்கின்றன. போரில் நகரங்களும் சாலைகளும் கடுமையாக சேதம் அடைந்திருப்பதாலும் துறைமுகங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாலும் உக்ரைனால் கையில் உபரி இருந்தாலும் ஏற்றுமதி செய்ய முடியாது. இந்தப் போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியாது. போரில் உருக்குலைந்த நாட்டைச் சீரமைக்க கடுமையான நிதியுதவி தேவைப்படும். முதல் வேலையாக மக்களுக்கு உணவளிக்க வேண்டும். எனவே கையிருப்பில் உள்ளதை உக்ரைன் தன்னுடைய பயன்பாட்டுக்காகத்தான் வைத்துக்கொள்ள முடியும்.

இதுவரை ரஷ்யாவுக்கு அதிக சேதம் இல்லை என்றாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடையாலும் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் பரப்பின் மீது பறக்கக் கூடாது என்று அவை தடை விதித்துவிட்டதாலும் ரஷ்யாவாலும் கோதுமை, பார்லி உள்ளிட்ட உணவு தானியங்களை விற்க முடியாது. இந்த நிலையில்தான் இந்தியாவால் உலக நாடுகளுக்கு உதவக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை

கோதுமை கொள்முதலுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2,015 ரூபாய் என்று நிர்ணயித்தது. இப்போது சர்வதேசச் சந்தையில் கோதுமைக்கு கிராக்கி அதிகமாகியிருப்பதால் குவிண்டால் 2,200 முதல் 2,300 ரூபாய் வரை விலை போகிறது. வழக்கமாக அரசு நிர்ணயிக்கும் விலையைவிடக் குறைத்துத்தான் வியாபாரிகள் விவசாயிகளிடம் விலையைக் கூறுவார்கள். தனியாரிடம் விற்பது எளிது என்பதால் விவசாயிகளும் வந்த விலைக்கு விற்றுவிட்டுப் போய்விடுவார்கள். இந்த ஆண்டு ரபி பருவத்தில் மட்டும் இந்திய கோதுமை, அரிசி, புன்செய் தானியங்கள், பருப்பு ஆகியவற்றின் ஏற்றுமதி மூலம் வழக்கமான வருமானத்தைவிட இந்த ஆண்டு கூடுதலாக 31,000 கோடி ரூபாய் இந்தியக் கிராமப்புறங்களுக்குக் கிடைக்கும் என்று சந்தை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

உலக அளவில் ஏற்றுமதியாகும் கோதுமையில் 12 சதவீதம், சூரியகாந்தி 47 சதவீதம், பார்லி 17 சதவீதம், குதிரை மசால் 20 சதவீதம், மக்காச் சோளம் 14 சதவீதம் உக்ரைனுடைய பங்களிப்பாகும். இந்தப் பருவத்தில் ஒரு மணி தானியத்தைக்கூட உக்ரைனால் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது. ரஷ்யாவின் உலக ஏற்றுமதி பங்களிப்பு சூரியகாந்தியில் 25 சதவீதம், கோதுமையில் 18 சதவீதம், பார்லியில் 14 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பற்றாக்குறைக்கு உலகச் சந்தை வேறு நாடுகளைத்தான் நாட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, முந்திரி – பாதாம் உள்ளிட்ட கொட்டைகள், பழ ரசங்கள், பருப்பு வகைகள், சிறு பயிர்கள், மிட்டாய் ரகங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியைப் பெருக்க இந்தியாவுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

35 லட்சம் டன்னுக்கு ஆர்டர்கள்

ஏப்ரல் முதல் ஜூலை வரையில் 35 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. தரமுள்ள பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்து உலகில் நிரந்த சந்தையைப் பிடித்திருப்பதைப் போல, கோதுமையிலும் சந்தையைக் கைப்பற்ற இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பு. கோதுமை சாகுபடியில் உலகில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. 2020-21-ல் 1,008 லட்சம் டன்கள் கோதுமை சாகுபடியானது. அது உலக உற்பத்தியில் 15 ச்தவீதம். ஆனால் இந்தியாவில் விளையும் கோதுமையில் பெரும்பகுதி பொது விநியோகத்துக்காகத் தொடர்ந்து கையிருப்பிலேயே வைத்துக்கொள்ளப்படுகிறது. மாநிலங்கள் மூலம்தான் இவை விநியோகிக்கப்படுகிறது. மத்திய அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு மானியங்கள் இதை வீணில்லாமல் வாங்கி விநியோகிப்பதில்லை.

கோவிட் -19 பெருந்தொற்றுக் காலத்தில் வேலையும் வருமானமும் இல்லாமல் வீட்டில் முடங்கிய மக்களுக்கு வழங்க இந்தக் கையிருப்பு பேருதவியாக இருந்தது. 2016-ல் மட்டும் இந்தியாவிடம் 400 லட்சம் டன் கோதுமை கையிருப்பில் இருந்தது. உலகச் சந்தையில் இந்தியா ஏற்றுமதி செய்த கோதுமையின் அளவு வெறும். 0.14 சதவீதம்! 2020-ல் இது உயர்ந்து 0.54 சதவீதமானது. ஆம், ஒரு சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. 2019-20-ல் 2 லட்சம் டன்கள், 2020-21-ல் 21.55 லட்சம் டன்கள், 2021-22-ல் 78.50 லட்சம் டன்கள் என்று குறைவாகத்தான் உயர்ந்தது. 2020-21-ல் உலகச் சந்தையில் ரஷ்யா 420 லட்சம் டன், உக்ரைன் 240 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்துவந்தன. 2022-23-ல் 100 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா உத்தி வகுத்திருக்கிறது.

குஜராத், ம.பி.

குஜராத்தும், கோதுமை விளைச்சலில் சமீப காலமாக சாதனை படைத்துவரும் மத்திய பிரதேசமும் இந்தியாவின் மேற்கில் உள்ள துறைமுகங்கள் வழியாக தெற்காசிய நாடுகளுக்கும் பக்கத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதி செய்கின்றன. துறைமுகங்களுக்கு வெகு தொலைவில் இருக்கும் பஞ்சாபும் ஹரியாணாவும் இதில் பின்தங்கியுள்ளன. துறைமுகங்களுக்குத் தானியங்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவு அவற்றுக்குக் கணிசமாகிவிடுகிறது.

உணவு தானியம் அதிகம் விளைந்தாலும் அதை விற்காமல் கையிருப்பில் வைத்து பாதுகாப்பதும், பணமாக்காமல் வீணடிப்பதும் பொருளாதார இழப்பாகும். எனவே மத்திய பிரதேச மாநில அரசு கோதுமை மீது மண்டிகள் விதிக்கும் வரி மற்றும் பிற கட்டணங்களை ரத்து செய்துவிட்டது. இவை மட்டுமே அதன் விலையில் 3.5 சதவீதம் வந்துவிடுகிறது. எனவே மத்திய பிரதேச கோதுமையை வாங்க போட்டி நிலவுகிறது. விவசாய மாநிலமான பஞ்சாபோ ஏற்றுமதியாளர்கள் 8.5 சதவீதம் அளவுக்குக் கட்டாயக் கொள்முதல் தந்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும் என்று விதித்துள்ளது. அவை போக பிற கட்டணங்களையும் விவசாயிகள் செலுத்த வேண்டியிருக்கிறது.

இந்தியாவுக்கு அனுகூலம்

உக்ரைன், ரஷ்யாவால் ஏற்றுமதி செய்ய முடியாது என்பதுடன் வேறொரு காரணமும் இந்திய ஏற்றுமதிக்கு வாய்ப்பாக இருக்கிறது. ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையில் எந்த நாட்டிலும் கோதுமை அறுவடைப் பருவம் வருவதில்லை. கோதுமை அதிகம் விளைவிக்கும் ஆஸ்திரேலியாவில் நவம்பரில்தான் கோதுமை அறுவடைக்கு வரும். எனவே இந்தியாவுக்குப் போட்டியும் கிடையாது. எகிப்து, இந்தோனேசியா, துருக்கி, நைஜீரியா, இத்தாலி, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குத்தான் உக்ரைனும் ரஷ்யாவும் கோதுமையை அதிகம் விற்றன. இந்த நாடுகள் இந்தியாவுக்கும் நட்பு நாடுகள்தான். எனவே விற்பதில் அதிக இடர் இருக்காது.

இந்திய உணவு கார்ப்பரேஷன் (எஃப்.சி.ஐ), மாநில அரசுக் கொள்முதல் முகமைகள், வணிகத் துறை, ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு பணிக்குழுவை மத்திய அரசு நியமித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து கோதுமை உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு இந்தக் குழு உதவி செய்யும். ஓராண்டில் இந்தியா இதில் நல்ல அனுபவமும், லாபமும் பெற்றுவிட்டால் வேளாண் ஏற்றுமதி நமக்கும் நிரந்தரமாகிவிடும். இந்திய விவசாயிகளின் வருவாயும் பெருகும்.

Related Stories

No stories found.