துடிக்கும் இதயத்தில் வெடிக்கத் தயாரான ‘கிரனேட்’!

உக்ரைன் மருத்துவரின் உலக சாகசம்!
துடிக்கும் இதயத்தில் வெடிக்கத் தயாரான ‘கிரனேட்’!

உக்கிரமான ரஷ்யா - உக்ரைன் போரில், சாகசக் சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. அவற்றில் ஒன்றாக ராணுவ மருத்துவர் ஒருவரின் சாதனை உலக அளவில் மெச்சுதலுக்கு ஆளாகி இருக்கிறது.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கை ஆதிக்கத்தின் அடிப்படையிலானது. ரஷ்ய வீரர்கள் மட்டுமன்றி, அந்நாட்டு பொதுமக்கள் மத்தியிலும் இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி நிலவுகிறது. இந்த போரின் மறுமுனையில் நிற்கும் உக்ரைன் வீரர்களோ, தாய்நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை தடுக்க உயிரை துச்சமாக்கி போரிட்டு வருகிறார்கள். உக்ரைனில் ராணுவ வீரர்கள் மட்டுமன்றி சாமனிய பொதுமக்கள் உட்பட பலரும் போர்முனையில் நிற்கிறார்கள். இப்படி தொடரும் சாகசங்கள் போர் முனைக்கு அப்பாலும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் ஒன்றை உக்ரைன் ராணுவ மருத்துவரான வெர்பா என்பவர் நிகழ்த்தியிருக்கிறார்.

ரஷ்யாவின் VOG-30 குடும்பத்தை சேர்ந்த கிரனேட்
ரஷ்யாவின் VOG-30 குடும்பத்தை சேர்ந்த கிரனேட்

சில தினங்கள் முன்பாக அவரிடம் உக்ரைன் போர் வீரர் ஒருவரை தூக்கி வந்தனர். ரஷ்ய தாக்குதலில் கிரனேட் வெடிகுண்டு பாய்ந்த நிலையில் அந்த வீரர் தவித்தார். மருத்துவர் வெர்பா, அந்த போர் வீரரின் உடல்நிலையை பரிசோதித்தார். ஒரு சில போர்க்காயங்களுக்கு அப்பால் அந்த வீரர் ஆரோக்கியமாகவே இருந்தார். ஆனால் உடலுக்குள் ரஷ்யா ஏவிய ’கிரனேட்’ வெடிகுண்டு ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் அந்த குண்டு வெடிக்கலாம் என்ற சூழலில், உக்ரைன் வீரரின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை பணயம் வைத்து அறுவை சிகிச்சையில் இறங்கினார் டாக்டர் வெர்பா.

சக மருத்துவர்கள் பலரும் தயங்க, 2 கவச பாதுகாப்பு கொண்ட ராணுவ வீரர்கள் துணையுடன் அறுவை சிகிச்சையை தொடங்கினார் வெர்பா. துடிக்கும் இதயத்தின் அருகே எப்போது வேண்டுமானாலும் வெடிப்பேன் என்றபடி சமர்த்தாக அமர்ந்திருந்தது அந்த கிரனேட் வெடிகுண்டு. அறுவை சிகிச்சையின்போது, சிறு அசம்பாவிதமும் மேற்படி குண்டை தூண்டச் செய்து, காயமடைந்த வீரர் மட்டுமன்றி மருத்துவர் வெர்பா உட்பட பலரையும் காவு வாங்கும் ஆபத்து இருந்தது. இந்த அறுவை சிகிச்சையில் இன்னொரு சவாலும் வெர்பாவுக்கு காத்திருந்தன.

அறுவைசிகிச்சையில் அகற்றப்பட்ட கிரனேட்
அறுவைசிகிச்சையில் அகற்றப்பட்ட கிரனேட்

அறுவை சிகிச்சையின்போது வெளியாகும் ரத்தத்தை கட்டுப்படுத்த ’electrocoagulation’ என்னும் மருத்துவ உத்தியை பயன்படுத்துவார்கள். மின்னாற்றல் பயன்பாட்டில், ரத்தப்பெருக்கை கட்டுப்படுத்த இது உதவும். ஆனால் மின்சாரத் தூண்டல் தூங்கும் கிரனேட்டை எழுப்பிவிடும் ஆபத்து இருந்ததால், அந்த உத்தியை தவிர்த்தார் வெர்பா. ராணுவ மருத்துவமனையின் பல அறைகள் பாதுகாப்பு கருதி காலிசெய்த பின்னர் வெர்பாவின் அறுவை சிகிச்சை தொடங்கியது. சில மணி நேரங்கள் போராட்டத்துக்குப் பின்னர் கிரனேட்டை வெளியில் எடுத்தார் வெர்பா. ’30எம்எம் VOG-30’ என்ற ரஷ்ய கிரனேடை அருகிலிருந்த வீரர்கள் உடனடியாக செயலிழக்கச் செய்தனர். தாக்குதலுக்கு ஆளான போர் வீரர் நலம் பெற்று வருகிறார்.

உயிரைப் பணயம் வைத்து டாக்டர் வெர்பா மேற்கொண்ட சாகசத்தை உக்ரைனுக்கு அப்பாலும் உலகளவில் மருத்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். போர்முனைக்கு நிகராக பிற தளங்களிலும் நின்று உக்ரைனியர்கள் போராடி வருவதற்கு டாக்டர் வெர்பாவின் துணிச்சலும், சாகசமும் சான்றாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in