புதின் ஜெலன்ஸ்கி
புதின் ஜெலன்ஸ்கிஉக்ரைன் - ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும்?

ஓராண்டு நிறைவு: உக்ரைன் - ரஷ்யா போருக்கு முடிவுரை எப்போது?

புலிவாலைப் பிடித்த கதையாகிவிட்டது ரஷ்யா - உக்ரைன் போர். கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி அதிரடியாக உக்ரைன் மீது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கையை’ ஆரம்பித்தது ரஷ்யா. சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்கும் மேலாக உக்கிரமாக தொடர்கிறது உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர். எப்போதுதான் இந்தப் போர் முடிவுக்கு வரும் என்பதுதான் உலகமக்களின் கேள்வியாக நீள்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதியின் காலையிலேயே உக்ரைனை உடும்புப்பிடியாய் கவ்வியது ரஷ்யாவின் போர்மேகங்கள். உக்ரைனின் வடக்கு, தெற்கு, கிழக்கு மூன்று முனைகளில் இருந்தும் ரஷ்யாவின் படைகள் தாக்குதலை தீவிரமாகத் தொடங்கின. முதலில் தலைநகர் கீவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் திட்டம். அதற்கு ஆரம்பத்தில் பலன் கிடைத்தது. சில புறநகர் பகுதிகள் ரஷ்யாவிடம் வீழ்ந்தன. ஆனால், அதன் பின்னர்தான் ஆட்டமே ஆரம்பித்தது.

உக்ரைனுக்கு உதவுவதற்கு வரிசை கட்டத் தொடங்கின உலகநாடுகள். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவியும், பொருளுதவியும் செய்யத் தொடங்கின. இதன் காரணமாக, ரஷ்யாவுக்கு பலமான பதிலடியும் கொடுக்க ஆரம்பித்தது உக்ரைன்.

தலைநகர் கீவ் மற்றும் மத்திய பகுதிகளை குறிவைத்த ரஷ்யா பலமான எதிர்வினை வந்ததும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை கைப்பற்றினால் போதும் என்ற முடிவுக்கு வந்தது. அதனையடுத்து வீரியமான தாக்குதலைத் தொடங்கி உக்ரைனின் கார்கிவ், கெர்ஸான், ஸாப்போரிஸியா மற்றும் மரியுபோலை தன்வசம் கொண்டு வந்தது ரஷ்யா.

இந்தச் சூழலில்தான் நேட்டாவில் சேர விண்ணப்பித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அதன் பின்னர் மேற்கத்திய நாடுகளின் உதவிகள் குவிய ஆரம்பித்தன. இதனால் உற்சாகத்துடன் திருப்பித் தாக்கிய உக்ரைன் பாம்புத்தீவை மீட்டது. போரில் தங்களின் கரங்கள் கீழிறங்குவதை உணர்ந்த புடின், செப்டம்பரில் 3 லட்சம் வீரர்களை களமிறங்க வைத்தார். இதன்பிறகு டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்ஸான், ஸாப்போரிஸியா பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் இணைத்துக்கொண்டது ரஷ்யா.

புதின்
புதின்ஓராண்டு நிறைவு: உக்ரைன் - ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும்?

தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மன் நாடுகளின் ஆயுத உதவி காரணமாக கார்கிவிலிருந்து முழுமையாகவும், கெர்ஸான் பிராந்தியத்தின் சில பகுதிகளிலிருந்தும் ரஷ்யா பின்வாங்கியது. பின்னர் கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட ரஷ்யா, ஜனவரியில் உப்பு சுரங்கங்கள் நிறைந்த உக்ரைனின் சொலேடர் நகரை கைப்பற்றியது. கடந்த வாரம் உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்து சென்ற பின்னர் போர்முனை தாக்குதல்கள் இன்னும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் போரில் இதுவரை பொதுமக்களில் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 16 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா அறிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மக்கள் சுமார் 80 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரின் திசை என்ன?

சோவியத் யூனியனில் ரஷ்யாவுடன் இருந்த நாடு உக்ரைன். தற்போது தனிநாடாக இயங்கி வருகிறது. என்றாலும், மொழி, கலாச்சாரம் என பலவற்றில் ரஷ்ய சார்பு இங்கே அதிகம். 1949-ல் சோவியத் யூனியன், ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் ‘நேட்டோ’ அமைப்பு உருவானது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் தொடங்கப்பட்ட ‘நேட்டோ’ அமைப்பு சோவியத் யூனியன் உடைந்த பின்னரும் தொடர்ந்தது. அதுமட்டுமின்றி தொடக்கத்தில் 12 உறுப்பினர்கள் மட்டுமே இருந்த ‘நேட்டோ’வில் அடுத்தடுத்து உறுப்பினர் களையும் சேர்த்து வந்தனர். முக்கியமாக, சோவியத் யூனியனில் முன்பு அங்கம் வகித்த நாடுகளையே உறுப்பினராக சேர்த்தது ’நேட்டோ.’ தற்போது ‘நேட்டோ’வில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.

ஜெலன்ஸ்கி பைடன்
ஜெலன்ஸ்கி பைடன்ஓராண்டு நிறைவு: உக்ரைன் - ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும்?

இந்த சூழலில்தான், ‘நேட்டோ’ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிகள் எடுத்தது ரஷ்யாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் உக்ரைன் நாடு ‘நேட்டோ’வில் உறுப்பினரானால், ரஷ்ய எல்லைவரை அதன் படைகள் வந்து நிற்கும். ‘நேட்டோ’ படைகள் உக்ரைன் எல்லையில் நிற்பது அமெரிக்காவே வந்து ரஷ்ய எல்லையில் நிற்பதற்கு சமம். இந்த ஆபத்தை உணர்ந்தே உக்ரைனுடன் போரைத் தொடங்கியதாகக் கூறுகிறார் புதின். இதனால்தான் அவர் இதனை போர் என்று குறிக்காமல், நியோ நாஜிக்களுக்கு எதிரான ‘ சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்று குறிப்பிட்டு வருகிறார்.

‘நேட்டோ’வில் சேரக்கூடாது என உக்ரைனை எந்த நோக்கத்துடன் ரஷ்யா எதிர்க்கிறதோ, அதே நோக்கத்துடனே ’நேட்டோ’வுடன் சேர உக்ரைனை ஆதரிக்கிறது அமெரிக்கா. ஒரு காலத்தில் பலம் பொருந்திய நாடாக இருந்த சோவியத் யூனியன் சிதறிய பின்னர், இப்போதும்கூட ரஷ்யாவை தனது எதிரி நாடாகவே பார்க்கிறது அமெரிக்கா. மேலும், அதன் அண்டை நாடான சீனா மீதும் அமெரிக்காவுக்கு கடும் எரிச்சல். இதன் காரணமாகவே, உக்ரைன் போருக்கு பல பில்லியன் கோடிகளை கொட்டிக்கொடுக்கிறது அமெரிக்கா.

அதுமட்டுமின்றி தனது நட்பு நாடுகளையும், உக்ரைனுக்கு உதவி செய்யும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. இந்த போர் தொடங்கிய பின்னர், உலக நாடுகளில், குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள், உணவுப் பற்றாக்குறை, விலைவாசி, பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே, எப்படியாவது இப்போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அனைத்து நாடுகளின் எண்ணமாக உள்ளது. ஆனால், போர் இப்போது திக்கற்ற திசையில் நிற்கிறது என்பதே உண்மை.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கிஓராண்டு நிறைவு: உக்ரைன் - ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும்?

எப்போது போருக்கு முடிவுரை?

கடந்த ஆண்டு போர் தொடங்கிய பின்னர் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தார் ஜெலன்ஸ்கி. அதன்பின்னர் உலக நாடுகளிடமிருந்து சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதம் மற்றும் பொருளுதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா இதுவரை 70 பில்லியன் டாலர்களையும், ஐரோப்பிய யூனியன் 37 பில்லியன் டாலர்களையும் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

இத்தனைக்குப் பிறகும் உக்ரைனால் வெறும் 5 சதவீத பகுதிகளை மட்டுமே ரஷ்யாவிடமிருந்து மீட்க முடிந்துள்ளது, இன்னும் 17 சதவீத பகுதிகள் ரஷ்யா வசமே உள்ளது. இப்போதும் உக்ரைனின் டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், ஸாப்போரிஸியா, கெர்ஸானின் பெரும்பாலான பகுதிகள் போன்றவை ரஷ்யாவின் வசமே உள்ளது. எனவே, வெளிநாட்டு உதவிகளைப் பெற்று இன்னும் எத்தனை காலத்துக்கு உக்ரைனால் போரைத் தொடர முடியும் என்பதே இப்போதைய மிகப்பெரிய கேள்வி.

சில வாரங்களில் தீர்த்துவிடலாம் என மிகச் சாதாரணமாக நினைத்தே போரைத் தொடங்கினார் புதின். ஆனால், இப்போது போர் அவரே கணிக்காத ஒரு பாதையில் வந்து நிற்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான போர் என்பதைத் தாண்டி, இப்போது இது ரஷ்யா - அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுக்கான மறைமுக யுத்தமாக மாறி நிற்கிறது.

ஐ.நா சபை தீர்மானங்கள், உலக நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்யா நிலைகுலைந்து போகும் என அமெரிக்கா கணக்குப் போட்டது. உண்மையில் போர் காரணமாக ரஷ்யா பொருளாதாரம், ராணுவ ரீதியில் குலைந்து போயுள்ளது உண்மைதான். அது அமெரிக்கா எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால்தான், ரஷ்யா எந்த நாட்டின் நேரடி உதவியும் இல்லாமல் இந்நாள் வரை போரில் தாக்குப்பிடிக்கிறது.

பைடன் புதின்
பைடன் புதின்ஓராண்டு நிறைவு: உக்ரைன் - ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும்?

‘நேட்டோ’வில் சேரமாட்டோம் என்று உக்ரைன் அறிவிக்கும் பட்சத்தில் ரஷ்யா போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், இனி அப்படி சொல்லவே முடியாத அளவுக்கு மேற்குலக நாடுகளிடம் கடன்பட்டு நிற்கிறது உக்ரைன். ரஷ்யாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதே உக்ரைன் ஆதரவு நாடுகளின் நோக்கம். உக்ரைனை எப்படியும் பணியவைக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் விருப்பம். இது இரண்டுக்குமே சாத்தியமில்லாத சூழலே இப்போது நிலவுகிறது.

போர் ஓராண்டை நிறைவு செய்தது குறித்துப் பேசிய இரு நாட்டுத் தலைவர்களும் “2023-ல் வெற்றி எங்களின் பக்கம்தான்” என்று சொன்னார்கள். எனவே, போர் இப்போது முடியாது என்பது தெளிவாகிறது.

உக்ரைனில் தொடர்ந்து துப்பாக்கி சத்தங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இரு நாடுகளுமே தங்களின் இறையாண்மைக்காக போரிடுவதாகச் சொல்கிறார்கள். இதில் யாரேனும் ஒருதரப்பு தங்கள் துப்பாக்கிகளை முதலில் மௌனிக்கச் செய்யவேண்டும். முதலில் யார் அதைச் செய்வது என்பது இப்போது கௌரவ பிரச்சினையாகவும் மாறி நிற்கிறது.

போரில் நுழையத் தெரிந்த இரு நாடுகளுக்கும் அதிலிருந்து வெளிவர வழி தெரியவில்லை. இரு நாட்டு போரில் தலையிட்ட சில நாடுகளுக்கும் அதனை தடுக்கத் தெரியவில்லை. இந்தப் போருக்கு முன்னுரை எழுதியவர்களால்தான் அதற்கான முடிவுரையையும் எழுத முடியும். அதற்கு முன்னால் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களை இப்போர்க்களம் குடிக்குமோ என்ற பதற்றமே நம்மை துரத்துகிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in