பெண் மீது விமானத்தில் சிறுநீர் கழித்தவர்: நீதிமன்ற விசாரணையில் அடித்தார் ’பல்டி’!

பெண் மீது விமானத்தில் சிறுநீர் கழித்தவர்: நீதிமன்ற விசாரணையில் அடித்தார் ’பல்டி’!

ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த வழக்கில், குற்றச்சாட்டுக்கு ஆளான சங்கர் மிஸ்ரா, இன்றைய நீதிமன்ற விசாரணையில் ’பல்டி’ அடித்துள்ளார்.

நவ.26 அன்று நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது போதை நபர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம், மிகத் தாமதமாக பொதுவெளியில் வெடித்தது. நடந்த சம்பவத்தில் விமான சிப்பந்திகளில் தொடங்கி விமான நிறுவனம் வரை எவரும் உரிய வகையில் எதிர்வினையாற்றவில்லை என பாதிக்கப்பட்ட பெண் பயணி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

சம்பவம் தொடர்பாக டாடா குழுமத்தின் தலைவருக்கு, அந்த பெண்மணி கடிதம் எழுதியதை தொடர்ந்து, இந்த விவகாரம் காவல்துறை வழக்கு விசாரணைக்கு ஆளானது. தனிப்படைகள் அமைத்து தேடிய காவல்துறை, அமெரிக்க நிறுவனம் ஒன்றின் இந்திய துணைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் சங்கர் மிஸ்ராவை பெங்களூருவில் கைது செய்தது. சங்கர் மிஸ்ராவின் அமெரிக்க நிறுவனம் அவரை வேலையிலிருந்து தூக்கியடித்தது.

முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்ட சங்கர் மிஸ்ரா, அவரது உடைகள் மற்றும் உடைமைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ததோடு, குறிப்பிட்ட தொகையையும் அனுப்பி சமாதானக்கொடி பிடித்துள்ளார். ஆனால் மூதாட்டி சார்பில் பணத்தை திருப்பி அனுப்பியவர்கள், காவல்துறை விசாரணைக்காக காத்திருந்தனர்.

தற்போது டெல்லி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையில் சங்கர் மிஸ்ரா தரப்பில், ’சிறுநீர் கழித்த’ குற்றச்சாட்டுக்கு திடீரென மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த ’சம்பவத்தை தான் செய்யவில்லை என்றும், மேற்படி பெண் பயணியின் இருக்கை சங்கர் மிஸ்ரா இருக்கையிலிருந்து அணுக முடியாதபடி இருந்ததாகவும், வேறு எவரேனும் சிறுநீர் கழித்திருக்கலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டது, மேலும் ’வயது முதிர்ந்த பெண்ணுக்கு புரோஸ்டேட் பிரச்சினை இருப்பதாகவும், அதன் காரணமாக அவரே தனது இருக்கையில் சிறுநீர் கழித்திருப்பதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வழக்கில் முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. மூதாட்டி மீது சிறுநீர் கழித்ததை பாலியல் குற்றமாக அணுக வேண்டும் என பெண்ணிய ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு சங்கர் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு வலுத்தால், பெருமளவு பாதகமாகும் என்பதால் இம்மாதிரி ’பல்டி’ வாக்குமூலம் தந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மூதாட்டி உடனான இவரது ’வாட்ஸ் அப்’ உரையாடல்கள் சங்கர் மிஸ்ராவுக்கு எதிராகவே நிற்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சங்கர் மிஸ்ராவின் பல்டி வாக்குமூலத்தால், அடுத்தக்கட்ட நீதிமன்ற விசாரணை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in