ஆர்ப்பரித்து எழுந்து வந்த அலை: புதுச்சேரி கடலில் குளித்த கோவை இளைஞர்கள் இருவர் மாயம்

ஆர்ப்பரித்து எழுந்து வந்த அலை: புதுச்சேரி கடலில் குளித்த கோவை இளைஞர்கள் இருவர் மாயம்
எம்.சாம்ராஜ்

புதுச்சேரி அருகே பெரிய முதலியார் சாவடி கடற்கரையில் குளித்த கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடலில்  அடித்துச் செல்லப்பட்டது  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கடற்பகுதிகளில் பெரிய முதலியார் சாவடி கடற்கரை,  அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. இங்கு மணல் பரப்பும்,  கடற்பரப்பும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. இதனால் அதிக அளவில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், போலீஸார் எச்சரிக்கையை மீறி கடலில் குளிக்கிறார்கள். அப்படி கோவையில் இருந்து இளைஞர்கள் சிலர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.  அவர்கள் இன்று அதிகாலை பெரிய முதலியார் சாவடி கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர்.  

அப்போது மிதுன், மகாவிஷ்ணு என்ற இரு  இளைஞர்கள் சற்று ஆழத்தில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் பெரிய  அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.  இதையடுத்து மற்றவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் இயலவில்லை. இதையடுத்து அங்கிருந்த மீனவர்களும்,  பொதுமக்களும்  இளைஞர்களை தேடினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோட்டகுப்பம் போலீஸாரும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கடலில் அடித்துச் செல்லப்பட்ட  இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

தீபாவளியை  முன்னிட்டு கர்நாடகத்திலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.  அதற்கு முன்பு வளவனூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.  தற்போது கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது அப்பகுதியில் கடல் அபாயம் மிகுந்ததாக இருப்பதை உணர்த்துகிறது. எனவே, பெரிய முதலியார் சாவடி கடல் பகுதியில் அதிக மரணங்கள் நடப்பதை தடுத்து நிறுத்த போலீஸார் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

படம் எம்.சாம்ராஜ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in