திரு.பட்டினத்தில் நோட்டமிட்ட மாடு திருடர்கள்: மாட்டியது எப்படி?

திரு.பட்டினத்தில் நோட்டமிட்ட மாடு திருடர்கள்: மாட்டியது எப்படி?

காரைக்கால் அருகே வயலில் மேய்ந்த மாடுகளை திருட முயன்ற இளைஞர்கள் இருவர், சுதாரிப்பான உரிமையாளரால் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

காரைக்காலை அடுத்துள்ளது திரு.பட்டினம் எனும் திருமலைராயன் பட்டினம். இங்குள்ள கீழவாஞ்சூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் 15-க்கும் மேற்பட்ட ஜெர்சி உள்ளிட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றை வீட்டின் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் வடக்குத் தெருவில் இருக்கும் தனது நிலத்தில் வைத்து  பராமரித்து வருகிறார். 

அந்த நிலத்தின் அருகில் உள்ள மேய்ச்சல் பரப்பில் தனது மாடுகளை மேயவிட்டு சற்று நேரம் வீட்டுக்கு சென்றுள்ளார் ராஜசேகர். சிறிது நேர இடைவெளியில் திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேய்ந்து கொண்டிருந்த மாடுகளில் இரண்டை, இளைஞர்கள் இருவர் தங்களது மினி வேனில் ஏற்ற முயன்று கொண்டிருந்தனர். மாட்டுத் திருட்டில் புதிதோ என்னவோ, இருவரின் கட்டளைகளுக்கு பணிய மறுத்து மாடுகள் இரண்டும் அடம்பிடித்து வந்தன.

சத்தமின்றி ஊருக்குள் விரைந்த ராஜசேகர், தன்ராஜ், மாதவன் உள்ளிட்ட உறவினர்களை அழைத்துக்கொண்டு திரும்பினார். அதுவரை மாடுகளை மினிவேனில் ஏற்ற போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும், கூட்டத்தை பார்த்ததும் வேனை அங்கேயே விட்டு தப்பியோடப் பார்த்தனர். ராஜசேகர் உள்ளிட்டோர் அந்த 2 இளைஞர்களையும் விரட்டிப் பிடித்து மடக்கினர். பின்னர் இருவரும் திரு பட்டினம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீஸார்  இருவரையும் விசாரித்ததில், அந்த இளைஞர்கள் காரைக்கால் இக்பால் வீதியைச் சேர்ந்த இப்ராஹிம்(19) மற்றும் மீராபள்ளி தோட்டத்தைச் சேர்ந்த அஜ்மல் அகமது(19) என்பது தெரிய வந்தது. இருவரும் மாடுகளை திருட முயற்சித்ததையும் ஒப்புகொண்டனர். அதனையடுத்து, இளைஞர்களை கைது செய்த போலீஸார், மாடு கடத்தல் முயற்சிக்கான வேனையும் பறிமுதல் செய்தனர். இளைஞர்கள் இருவரும் பட்டப்பகலில் மாடுகளை திருட முயன்றது அப்பகுதியில் உள்ளோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in