
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் பட்டப்பகலில் டூவீலர் பெட்டியை உடைத்து 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், நாட்டசரன்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48) இவர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக உள்ளார். இவர் குடும்பத் தேவைக்காக வங்கிகளில் இருந்து எடுத்த 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை தன் டூவீலரில் உள்ள பாக்ஸில் வைத்து இருந்தார். மோட்டார் சைக்கிளுக்கு பக்கவாட்டில் உள்ள அந்த பிரத்யேக பாக்ஸிற்கு பூட்டுப் போட்டு இருந்ததால், அந்த வண்டியை வழியில் விட்டுவிட்டு ஒரு பேட்டரி கடைக்குச் சென்றார்.
அங்கே ஏற்கனவே சார்ஜ் போடக் கொடுத்து இருந்த பேட்டரியை வாங்கிவிட்டு பத்து நிமிடத்திற்குள் மீண்டும் பைக் விட்ட இடத்திற்கே வந்தார். ஆனால் அதற்குள் அவரது மோட்டார் சைக்கிள் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர், பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்த 2 லட்சம் ரூபாயும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படப்பையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.