
தவறான நட்பைத் கைவிட்டுவிட்டு வேறு ஒருவருடன் பழகியதால் பாமக மகளிரணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகள் மாரியம்மாள்(44). இவர் குருவிகுளம் ஒன்றிய பாமக மகளிர் அணி நிர்வாகியாக இருந்தார். கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரெங்கசமுத்திரத்தில் மாரியம்மாள் தனியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே, இவர் இலவன்குளம் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் இறந்துகிடந்தார். தன் மகள் சாவில் மர்மம் இருப்பதாக மாரியம்மாளின் தாய், சண்முகத்தாய் சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸாரின் விசாரணையில் புளியம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த முத்துகாலாடி(57) என்பவர் தன் நண்பர் சுப்பையா பாண்டியன்(58) என்பவரோடு சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாருக்கு முத்துகாலாடி கொடுத்த வாக்குமூலத்தில், “எனக்கும், மாரியம்மாளுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துவந்தது. இந்தநிலையில் என்னுடனான உறவைத் துண்டித்துவிட்டு அண்மைக்காலமாக மாரியம்மாள் இன்னொரு வாலிபருடன் பழகியதால் கொலை செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார். இருவரையும் நேற்று மாலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.