வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 இளைஞர்கள்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2  இளைஞர்கள்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

துவரிமான் பகுதியில் உள்ள கோயிலில் சாமி கும்பிடுவதற்காக சென்ற இரண்டு பேர் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.njpd

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மதுரை வைகையாற்றில் நீரின் வேகமானது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், மதுரை வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கைகளை மீறி பொதுமக்கள் குளிக்கச் செல்வதால் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

கடந்த 9-ம் தேதி சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் குளித்த திருமங்கலம் கரடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வினோத்குமார், அன்பரசன் ஆகிய இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், இருவரின் உடலை எடுக்கும்போது அடையாளம் தெரியாத மற்றொரு நபரின் உடலும் மீட்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை துவரிமான் முத்தையா சுவாமி கோயிலுக்கு உறவினர்களுடன் சாமி கும்பிடுவதற்காக வந்த மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் மற்றும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இருவரும் துவரிமான்-பரவை வைகை ஆற்று பாலத்தின் கீழே குளித்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே, இருவரின் உடலை தேடும்பணியில் இன்று இரண்டாவது நாளாக தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில், மதுரை வண்டியூர், தேனூர் மண்டபத்தின் அருகே வைகை ஆற்றில் மிதந்துகொண்டிருந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மதுரை வைகை ஆற்றில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து நான்கு பேர் உயிரிழந்த நிலையில், நேற்று காணாமல் போன இருவரின் உடலைத் தேடி வருகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்று கரையோரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத உடல்களை மீட்கும் போது முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in