பேருந்து படிக்கட்டில் பட்டாக்கத்தியை தேய்த்தபடி மிரட்டல் பயணம்: சிசிடிவியால் சிக்கிய 2 மாணவர்கள் கைது

சாரதி
சாரதி

பேருந்துப் படிக்கட்டில் கத்தியை தேய்த்துக்கொண்டு பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வியாசர்பாடி ஈ.எச் சாலையில் செங்குன்றத்தில் இருந்து தங்கச்சாலை சென்ற (தடம் எண் 57) மாநகரப் பேருந்தில் சில கல்லூரி மாணவர்கள் கோஷம் போட்டுக்கொண்டு பட்டாக்கத்தியை தரையில் தேய்த்தபடி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்த வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோ தொடர்பாக எம்.கே.பி நகர் போலீஸார் கலகம் செய்யத் தூண்டுதல், பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், கடந்த மாதம் அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் மேற்கூரையில் தொங்கியபடியும், கத்தியைத் தேய்த்து கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து கத்தியைத் தேய்த்தப்படி சென்ற அம்பேத்கர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர்(18, பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சாரதி(19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களை எச்சரித்து மேஜிஸ்திரேட் பிணையில் விடுதலை செய்தார்.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் உடனடியாக கைது செய்யும்படியும், அவர்களுக்கு நூதன தண்டனை வழங்க இருப்பதாகவும் மேஜிஸ்திரேட் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in