டாஸ்மாக் கடையில் 24 லட்சம் பொய்க்கணக்கு காட்டி கையாடல்: விற்பனையாளர், மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடையில் 24 லட்சம் பொய்க்கணக்கு காட்டி கையாடல்: விற்பனையாளர், மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

விழுப்புரம் அனந்தபுரம் அருகே வரிக்கல் டாஸ்மாக் கடையில், ரூ.24 லட்சம் கையாடல் செய்த, டாஸ்மாக் கடை விற்பனையாளர் அசோகன், மேற்பார்வையாளர் அர்ஜுனன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி  மாவட்டங்களில்  227 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனையடுத்து வெளி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு  கடந்த சில நாட்களாக டாஸ்மார்க் கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த  சோதனையில் கூடுதல்  விலைக்கு விற்பனை செய்த ஊழியர்கள் கண்டறியப்பட்டு  விழுப்புரம் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே, நேற்று  இரவு செஞ்சி அருகே வரிக்கல் கிராமத்தில்  உள்ள டாஸ்மாக் கடையில் பறக்கும்படை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.27,63,980 பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தொகைக்கான பீர், பிராந்தி பாட்டில்களை விற்பனை செய்துவிட்டு, மதுபாட்டில்கள்  விற்காமல்  இருப்பதாக  இருப்புக் கணக்கு காட்டப்பட்டிருந்தது. அவற்றை விற்பனை செய்துவிட்டு விற்பனையான தொகையை  சம்பந்தப்பட்ட கடையின் மேற்பார்வையாளர் அர்ஜுனன், விற்பனையாளர் அசோகன் ஆகியோர் கையாடல் செய்திருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராமுவுக்கு  பறக்கும் படையினர் அறிவுறுத்தினர். 

இதனைத்தொடர்ந்து கையாடல் செய்த 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து  டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராமு  உத்தரவிட்டார் . மேலும் இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க விழுப்புரம் எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அதிகரிகள் கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in