போலி குண்டுமணி தங்கம் 6 லட்சத்துக்கு விற்பனை: தரங்கம்பாடி வியாபாரியை ஏமாற்றிய கர்நாடக கும்பல் சிக்கியது

போலி குண்டுமணி தங்கம் 6 லட்சத்துக்கு விற்பனை: தரங்கம்பாடி வியாபாரியை ஏமாற்றிய கர்நாடக கும்பல் சிக்கியது

போலி  குண்டுமணி நகைகளை தங்கம் எனக்கூறி ஏமாற்றி விற்றுவிட்டு தப்பிக்க முயன்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவரை  மயிலாடுதுறை போலீஸார்  கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி சாத்தனூரை சோ்ந்தவா் கணேசன்  மகன் கண்ணன் (45). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த நவம்பா் 25 -ம் தேதி இவரை வந்து சந்தித்த  2 போ் தங்களது வீட்டில் குழிதோண்டும்போது பூமிக்கு அடியில் தங்கத்தாலான குண்டுமணி மாலை புதையல் கிடைத்ததாகவும், தற்போது மருத்துவ செலவிற்கு பணத்தேவை இருப்பதால் அதனை குறைந்த விலைக்கு விற்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த மாலையில் இருந்து 2 மணிகளை கழற்றித்தந்து பரிசோதித்த பின்னா் பணம் தர சொல்லியுள்ளனா். அதனைப் பெற்றுச்சென்ற கணேசன் நகை வியாபாரியிடம் சோதித்ததில் அந்த 2 மணிகளும் தங்கம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கேட்ட  5 லட்சம் ரூபாயை  கொடுத்த கணேசன்  3 கிலோ குண்டுமணி மாலையை வாங்கியிருக்கிறார். 

இதேபோல், மயிலாடுதுறை தாலுகா கொற்கை கிராமத்தைச் சோ்ந்த பாலகுரு என்பவரிடமும் 1 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, 1 கிலோ எடையிலான குண்டுமணி மாலைகளை அந்த நபா்கள் விற்றுள்ளனா். வாங்கி எடுத்துச்சென்று வீட்டில் பரிசோதித்தபோது அவை போலி நகைகள் எனத் தெரிய வந்ததுள்ளது‌. இதனால், ஏமாற்றமடைந்த கண்ணன், பாலகுரு ஆகிய இருவரும் கடந்த மாதம் டிசம்பர் 31-ம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து புகாா் அளித்தனா். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட  தனிப்படையினா் இதுகுறித்து  விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கா்நாடக மாநிலம் மைசூா் உத்தகல்லியைச் சோ்ந்த ராஜாராம் என்பவரின் மகன் 28 வயதான தேவ், பிரேம்லால் என்பவரின் மகன் 44 வயதான ராஜூ ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து ரயில் மூலம் வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற குற்றவாளிகள் தேவூ , ராஜிவ் ஆகியோரை மயிலாடுதுறை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்து, அவா்களிடமிருந்து  5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்று பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலியான குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி வணிகர்களை நம்ப வைத்து  ஏமாற்றிய இந்த நூதன மோசடி சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in