குமரியில் வெடிமருந்து சப்ளை; கேரளாவில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு: அதிரடி காட்டியது போலீஸ்

கைது
கைது

குமரி- கேரள எல்லையோரப் பகுதியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டனர். கேரளத்தை சேர்ந்த இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம், பாறசாலை பகுதியில் ஒரு வீட்டில் வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாறசாலை போலீஸார் அந்த வீட்டிற்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் அருண்(24), விபின்(23) என்ற இரு வாலிபர்கள் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

கேரள போலீஸார் இவர்கள் இருவரையும் கைது செய்து, நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். அப்போதுதான், குமரி மாவட்டம், காஞ்சாம்புறம் பகுதியில் இருந்து இவர்களுக்கு வெடிமருந்து கிடைத்தது தெரியவந்தது. ஆனால் இவர்கள் அந்தக் கடையில் சாதாரணமாக விற்பனைக்குக் கிடைக்கும் ஓலைப் பட்டாசுகளை மொத்தமாக வாங்கிச் சென்று, அதில் ஓலையை பிய்த்துப் போட்டுவிட்டு வெடி மருந்தை மட்டும் எடுத்து, அதனோடு கண்ணாடி துகள்களைச் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் கேரள மாநிலம் பாறசாலையில் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் காஞ்சாம்புறம் பகுதிக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கடையில் இருந்து ஓலைப்பட்டாசு வாங்கிச் சென்றது தெரியவந்தது. இருந்தும் கடைக்காரரிடம் முன்பின் தெரியாதவர்கள் மொத்தமாக ஓலைப் பட்டாசு கேட்டாலும், கொடுக்கக் கூடாது எனவும், சந்தேகம் இருந்தால் காவல் நிலையத்தில் தகவல் சொல்ல வேண்டும் எனவும் எச்சரித்தனர். வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த அருண், விபின் ஆகியோரை கைது செய்த போலீஸார், அவர்கள் எதற்காக , யாருக்கு கொடுக்க நாட்டு வெடிகுண்டு தயாரித்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in