தரைமட்டமான பட்டாசு ஆலை; உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்; உரிமையாளர் இருவர் கைது

பெரிய காட்டுப்பாளையம் வெடி விபத்து
பெரிய காட்டுப்பாளையம் வெடி விபத்து தரைமட்டமான பட்டாசு ஆலை; உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்; உரிமையாளர் இருவர் கைது

கடலூர் மாவட்டம், பெரியகாட்டுப்பாளையத்தில் நேற்று நடந்த வெடி விபத்தில்  பட்டாசு ஆலை உரிமையாளர் கோசலை மற்றும் அவரது கணவர் சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம்  தவளக்குப்பம் அருகே உள்ள தமிழகப் பகுதியான பெரிய காட்டுப்பாளையத்தில் கோசலை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது.  உள்ளே தொழிலாளர்கள் ஏழு பேர் சிக்கிக் கொண்டனர்.  

இதையடுத்து  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட காவல்துறையினரும், புதுவை மாநிலம்  ரெட்டிச்சாவடி காவல் நிலைய போலீஸாரும் அங்கு விரைந்து வந்தனர்.  தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து உள்ளே சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.  கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பூபாலன் என்ற தொழிலாளி  உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில்,  அஜாக்கிரதையாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கோசலை மற்றும் அவரது கணவர் சேகர் ஆகியோர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in