திடீரென யூ டர்ன் போட்டு திரும்பிய லாரி: ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த இருவர் பலி

திடீரென யூ டர்ன் போட்டு திரும்பிய லாரி: ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த இருவர் பலி

பெரம்பலூர் அருகே எதிர்பாராத விதமாக யூ டர்ன் அடித்து திரும்பி டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேர்வராயன் குப்பத்தைச் சேர்ந்தவர் செந்தில் மகன் ரஞ்சித்குமார் (27). சிங்கப்பூரில் வசித்து வந்த இவர், அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். மீண்டும் சிங்கப்பூர் செல்வதற்காக நேற்று இரவு ஊரிலிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். 

அவருடன் சிங்கப்பூர் செல்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் ஓகையூரைச் சேர்ந்த செல்வா மனைவி மகேஸ்வரி (23), அவரது மகள் சாருநேத்ரா (5) ஆகியோரும் சேர்ந்து  காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் அதே ஊரைச் சேர்ந்த ஜெயவேல், நாகமுத்து ஆகியோர்  இவர்களை அனுப்பி வழி அனுப்பி வைப்பதற்காக உடன் வந்தனர். இவர்கள் வந்த வாடகை காரை சேர்வராயன்குப்பத்தைச் சேர்ந்த முத்துசாமி ஓட்டி வந்தார். 

கார் பெரம்பலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி பிரிவு ரோட்டில் வந்து கொண்டிருந்த போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, திடீரென யூ டர்ன் அடித்து திரும்பியது. இதனைக் கவனிக்காமல் வந்த  கார்  ஓட்டுநரால் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. காரில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதில் காரில் அமர்ந்திருந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த பாடாலூர் காவல் நிலைய போலீஸார், காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமி சாருநேத்ரா  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து பாடாலூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கோர விபத்தில் சிங்கப்பூர் செல்ல இருந்த சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளது கடலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in