
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வயலில் விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண்ணும், அவரை காப்பாற்றச் சென்ற அவரது சகோதரி மகனும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வழுவூர் ஊராட்சி பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சந்திரா (45). இவர் நேற்று மாலை தனது தங்கையின் பிளஸ் 1 படிக்கும் மகன் மணிகண்டனுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். புயல் காரணமாக நேற்று வீசிய பலத்த தரைக்காற்றின் காரணமாக வயலில் உள்ள மோட்டாருக்கு செல்லும் மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்திருக்கிறது.
அதைக் கவனிக்காமல் அந்த வழியாக சென்ற சந்திரா எதிர்பாராத விதமாக மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியுள்ளது. உயிருக்கு போராடிய தனது பெரியம்மாவை கண்ட மணிகண்டன் செய்வதறியாமல் பாய்ந்து சென்று சந்திராவைக் காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த பெரம்பூர் போலீஸார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் உள்ளிட்ட இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.