வேகமாக விரைந்த காரில் வெடித்த டயர்: பறிபோன இரண்டு உயிர்கள்

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

தூத்துக்குடி குறுக்குச்சாலை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் பிரபாவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர் திருச்செந்தூரில் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். 8 மாத கர்ப்பிணியான அவருக்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக பழனிசாமி காரில் தனது குடும்பத்தினருடன் இன்று காலை புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார். பழனிசாமியின் மனைவி சங்கரேஸ்வரி, மகன் சங்கர், உறவினர்கள் உட்பட மொத்தம் 11 பேர் காரில் பயணித்தனர்.

தூத்துக்குடி குறுக்குசாலை அருகே வரும்போது இவர்கள் பயணம் செய்த காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைகுலைந்த கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் பிரபாவின் தாய் சங்கரேஸ்வரி, உறவினரான ஆசிரியர் மருதாயி ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் காயம் அடைந்த 3 சிறுவர், சிறுமிகள் உட்பட 8 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் காரை ஓட்டி வந்த பழனிசாமி மகன் சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in