சிவகாசி அருகே பெண் குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக இடைத்தரகர்களாக செயல்பட்ட செவிலியர் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரநேரியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான பஞ்சவர்ணம் பிரசவத்திற்காக மாரநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஜன.4-ம் தேதி பெண் குழந்தை பிறந்து.
இக்குழந்தையை நாகர்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் ஜார்ஜ்- ஐரின் தம்பதிக்கு ரூ.40 ஆயிரத்திற்கு விற்றனர். சட்ட விரோதமாக குழந்தை விற்பனையில் மாரனேரி ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த செவிலியர் அஜிதா, கிராமப்புற செவிலியர் முத்துமாரியம்மாள் ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடர்பாக பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம், ஐரின், அஜிதா, முத்துமாரியம்மாள் ஆகியோர் மீது மாரநேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான ஜார்ஜை தேடி வருகின்றனர். இதனடிப்படையில், அஜிதா, முத்துமாரியம்மாள் ஆகியோரை விருதுநகர் மாவட்ட சுகாதார நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.