கரோனா போரில் களமிறங்கும் புதிய தடுப்பூசிகள்!

கரோனா போரில் களமிறங்கும் புதிய தடுப்பூசிகள்!

தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34ஆக இருந்த நிலையில், மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 11 பேரில் 7 பேர் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள். இதர 4 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

இந்த வகையில் தமிழகத்தில் ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக சிகிச்சை பெற்று வந்த 34 பேரில் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் அவர்களில் 5 பேர் மட்டுமே சிகிச்சையை தொடர்ந்து வருகின்றனர்.

இந்திய அளவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, 60+ வயதினரில் இணைநோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் பெறுவதற்கு, அதனை உறுதி செய்யும் மருத்துவச் சான்று அவசியம் என்ற நிபந்தனையை மத்திய அரசு நீக்கியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இன்றைய(டிச.28) அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2வது டோஸ் கரோனா தடுப்பூசி பெற்றவர்கள் அதிலிருந்து, 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் முடிவடைந்த பின்னரே பூஸ்டர் டோஸ் போடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருந்தொற்றுக்கு எதிரான போரில், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுடன் மேலும் 2 ஊசிகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் இருக்கும் தடுப்பூசிகளில் இருந்து இந்த இரண்டும், தங்கள் பரிசோதனை இலக்குகளை பூர்த்தி செய்து களமிறங்குகின்றன.

இவற்றில் கோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை, கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் நிறுவனவே உற்பத்தி செய்கிறது. 1600 தன்னார்வலர்களிடம் 3 கட்ட பரிசோதனைகளை இந்த தடுப்பூசி முழுமை செய்துள்ளது. 18 முதல் 99 வயது வரையிலானவர்கள் இந்த ஊசியை பெறலாம். கார்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை பயாலஜிக்கல்-இ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இது 2140 தன்னார்வலர்களிடம் 3 கட்ட பரிசோதனை முடித்துள்ளது. 18 முதல் 80 வயதுடையவர்கள் இந்த தடுப்பூசியை பெறலாம்.

Related Stories

No stories found.