வாட்ஸ்அப் மூலம் அழைத்தவர்கள் சிக்கினர்: கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் தொடரும் கைது நடவடிக்கை

வாட்ஸ்அப் மூலம் அழைத்தவர்கள் சிக்கினர்: கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் தொடரும் கைது நடவடிக்கை

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் இரண்டு பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி கடந்த மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டம் இளைஞர்கள் மற்றும் சில அமைப்புகளின் கைக்கு சென்றதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் வெடித்தது.

பள்ளியின் பேருந்துகள், உடைமைகள், ஆவணங்கள் அனைத்தும் எரித்து நாசமாக்கப்பட்டன. காவல்துறை வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் நடைபெற்ற கலவரம் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப் பட்டு அவர்கள் பல்வேறு ஆதாரங்களின் மூலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். நேற்றுவரை 344 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு மேலும் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வாட்ஸ் அப் மூலம் கலவரத்தில் ஈடுபட பலரையும் அழைத்ததாக ஞானப்பிரகாசம், வல்லரசு ஆகிய இருவரை நேற்று இரவு சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். அதன்மூலம் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு பக்கம் கலவரத்தில் ஈடுபடாத, சம்பந்தப்படாதவர்களை கைது செய்துள்ளதாக கூறி கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள், காவல்துறை தலைமை அலுவலகம் மற்றும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இன்னொரு பக்கம் பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை தொடர்ந்து நாடி வருகின்றனர்.
இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஒருவர் விடாமல் கண்டறிந்து தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர் சிறப்பு புலனாய்வு குழுவினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in