ஏடிஎம்மில் பணத்தை பறிகொடுத்த பெட்ரோல் பங்க் மேலாளர்: மீட்டுக் கொடுத்த சுமை தூக்கும் தொழிலாளர்கள்!

இளைஞர்களை பாராட்டும் காவல்துறையினர்
இளைஞர்களை பாராட்டும் காவல்துறையினர்

வங்கி ஏடிஎம்மில் பெட்ரோல் பங்க் மேலாளர் தவறவிட்ட பணம் ரூ. 40 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த சுமை தூக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் பாராட்டினர்.

மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜர் சாலையில் இருந்த இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ. 40 ஆயிரம் பணத்தினை டெபாசிட் செய்துள்ளார்.

இதன் பின் சரவணன், அவசரமாக பணிக்கு கிளம்பிச்சென்ற நிலையில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் உள்ளே செல்லாமல் வெளியே வந்துள்ளது. இந்நிலையில், சரவணன் பின்னால் பணத்தை செலுத்த காத்திருந்த மதுரை தமிழன் தெருவைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளிகளான முத்துராஜ், சதீஷ் ஆகியோர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, தெப்பக்குளம் காவல்நிலையத்திற்கு சென்றனர். தாங்கள் எடுத்த பணத்தை கொடுத்து நடந்தவற்றை காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி பணத்தை தவறவிட்ட சரவணனை அழைத்து ரூ. 40 ஆயிரத்தை நேற்று முன்தினம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, பெட்ரோல் பங்க் மேலாளர் தவறவிட்ட பணத்தை நேர்மையாக எடுத்து அதனை காவல்நிலையத்தில் பொறுப்போடு ஒப்படைத்த தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு தெப்பக்குளம் காவல் நிலைய சரக துணை ஆணையர் முத்துராஜ் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in