கொட்டித் தீர்க்கும் மழையால் இடிந்து விழுந்த வீடுகள்; பறிபோன உயிர்கள்: டெல்டாவில் சோகம்

கொட்டித் தீர்க்கும் மழையால் இடிந்து விழுந்த வீடுகள்; பறிபோன உயிர்கள்: டெல்டாவில் சோகம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் திருவாரூர் அருகே இருவர் உயிரிழந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் பொதுவாக அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்துக்கு பிறகுதான் பருவமழை தொடங்கும். அப்போது முதல் நான்கு மாதங்களுக்கு இடைவிடாமல் பெய்யும் மழையால் டெல்டா வெள்ளக்காடாக மாறும். வயல்கள் மூழ்கும். விளைச்சல் நாசமாகும். மழையால் மண் சுவர்கள் இடிந்து விழுந்து உயிர்பலிகளும் நடக்கும். ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்திலேயே அந்த காட்சிகள் டெல்டாவில் தொடங்கிவிட்டது.

கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே டெல்டாவில் தொடர்ந்து மாலை இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மிக அதிகபட்சமாக நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் நேற்று அதிக மழை பொழிந்து இருக்கிறது. இதனால் குறுவைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பா விதைப்பு தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சுவர் இடிந்து விழுந்து உயிர் பலிகளும் ஆரம்பமாகி விட்டன. திருவாரூர் அருகே கண்கொடுத்த வணிகம் என்ற ஊரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் கணபதி என்ற 80 வயது முதியவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அவரது மனைவி இந்திராணி காயமடைந்தார்.

குடவாசல் அருகே வடவேர் என்ற கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அலமேலு என்ற 70 வயது மூதாட்டி உயிரிழந்தார். இருவரது உடல்களும் காவல் துறையினரால் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in