
பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம் அருகே, இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், கிழுமத்தூர் குடிகாட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் தினேஷ் மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆக்கனூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் மகன் விஜய் ஆகிய இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில், அரியலூரில் இருந்து கிழுமத்தூர் குடிகாட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
துங்கபுரம் காரைப்பாடி இடையே உள்ள ஆணைவாரி ஓடை அருகே அவர்களது சக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தினேஷ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சாலை விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.