திருச்சி மத்தியச்சிறை
திருச்சி மத்தியச்சிறைஒரே நாளில் இரண்டு கைதிகள் மரணம்: திருச்சி சிறையில் பரபரப்பு

ஒரே நாளில் இரண்டு கைதிகள் மரணம்: திருச்சி சிறையில் பரபரப்பு

திருச்சி  மத்தியச் சிறையில்  கைதிகள் இருவர்  ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளதால் சிறை வளாகத்தில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கடந்த 9-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது.  உடனடியாக  அவரை சிறை  போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கே அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்,  சிகிச்சை பலனின்றி  அவர் பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ் என்கிற ஸ்டீபன். இவர் ஒரு வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 6-ந் தேதியன்று  குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் வந்து மயங்கி சரிந்தார். 

சிறை  அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்  நேற்று இரவு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைப் பெற்று சிறையில்  அடைக்கப்பட்டிருந்த நிலையில் இறந்துள்ளார். திருச்சி சிறையில் இருந்த இரண்டு  கைதிகள் ஒரே நாளில்  அரசு மருத்துவமனையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in