இந்தியர் மானம் ‘விமானம் ஏறிய’ விவகாரங்கள் சொல்வதென்ன?

சிறுநீர் கழிப்பு முதல் எமர்ஜென்சி திறப்பு வரை
ஏர் இந்தியா - இன்டிகோ விமானங்கள்
ஏர் இந்தியா - இன்டிகோ விமானங்கள்

முன்பெல்லாம் ‘மானம் கப்பலேறியது’ என்று தலையில் அடித்துக்கொள்வார்கள். அண்மையில் விமான பயணங்களை ஒட்டி இந்தியர்கள் சிலர் நடந்துகொண்ட விதம், சர்வதேச அரங்கில் இந்தியர்களின் தலைகுனிவுக்கு வித்திட்டன. இப்படி மானம் ’விமானமேறியதன்’ பின்னணியில் அரங்கேறும் அதிகார நாடகங்களும் அதனை முன்வைத்து, தொடரும் விவாதங்களும் அத்தனை எளிதில் புறந்தள்ள முடியாதவை.

ஆகாயத்தில் அசிங்கம்

அமெரிக்காவை தலையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இந்திய துணைத்தலைவர் பொறுப்பை வகித்து வந்தவர் சங்கர் மிஸ்ரா. இந்திய மேட்டுக்குடியின் பிரதிநிதியான இவர், நவ.26 அன்று நியூயார்க் - டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் கிளாஸில் பயணித்தார். பல்லாயிரம் அடி உயர்த்தில் விமானம் பறந்தபோது, இவர் செய்த ஒரு காரியம் விமானத்தில் பயணித்த அனைவரையும் பதறடித்தது.

போதையின் உச்சத்திலிருந்த சங்கர் மிஸ்ரா சக பயணியான ஒரு மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்தார். சங்கர் மிஸ்ராவின் ஆடைகளை சரிசெய்து, அந்த இடத்திலிருந்து அவரது இருக்கைக்கு அனுப்ப சக பயணிகள் தடுமாற வேண்டியதாயிற்று. ஆண் ஒருவனின் சிறுநீரில் தொப்பலாய் நனைந்ததில், 70 வயதைக் கடந்த அந்த மூதாட்டி கூனிக் குறுகிப்போனார். மூதாட்டிக்கு மாற்று உடை, மாற்று இடம் அளித்ததற்கு அப்பால், நடந்த சம்பவத்தில் விமான சிப்பந்திகள் எதையும் பெயர்க்கவில்லை.

ஏர் இந்தியா - சங்கர் மிஸ்ரா
ஏர் இந்தியா - சங்கர் மிஸ்ரா

அப்போது மட்டுமன்றி விமானம் தரையிறங்கி பல தினங்களான பின்னரும், சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்வினையாற்றவில்லை. பொறுத்துப் பார்த்த மூதாட்டி, ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமத்தின் தலைவருக்கு நியாயம் கேட்டு கடிதம் எழுதினார். அந்த கடிதம் தொடர்பாக மூதாட்டியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகே பொதுவெளி கொந்தளித்தது. காவல்துறை வழக்கு பதிந்து சங்கர் மிஸ்ராவை தேடியது. அதுவரை அன்னாரின் பெயர் குறித்த தகவல் கூட வெளியே கசிந்திருக்கவில்லை.

ஆனால் சங்கர் மிஸ்ரா புகாருக்கு ஆளானதுமே, அமெரிக்க நிறுவனம் அவரை பணியிலிருந்து தூக்கியடித்தது. டெல்லி காவல்துறை தனிப்படைகள் அமைத்து தேட ஆரம்பித்தது. தலைமறைவாக இருந்தபடியே தனது வழக்கறிஞர்கள் வாயிலாக, மூதாட்டியிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய சங்கர் மிஸ்ரா, மூதாட்டியின் சிறுநீர் படிந்த உடைமைகள் பெற்று சுத்தம் செய்து திரும்ப அளித்திருக்கிறார். மேலும் தொகை ஒன்றையும் ஆன்லைனில் அவர் அனுப்ப, மூதாட்டி தரப்பில் அதனை திருப்பியடித்திருக்கிறார்கள். கடைசியாக பெங்களூருவில் பதுங்கியிருந்த சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தீராத விளையாட்டுப் பிள்ளை தேஜஸ்வி

அடுத்த விமான விபரீதம், சென்னையில் நடந்தேறியது. டிச.10 அன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்பவிருந்த இன்டிகோ விமானம் திடீரென களேபரமானது. விமானப் பயணிகளில் எவரோ ஒருவர், விமானத்தின் அவசகரகால கதவை திறந்ததாக புகார் எழுந்தது. கிளம்பத் தயாராக இருந்த விமானம், பயணத்தை ஒத்திப் போட்டதோடு பயணிகளை வெளியேற்றி, பொறியாளர்கள் உதவியுடன் முழுமையான சரிபார்ப்புக்கு ஆளானது. இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலான தாமதத்துக்குப் பின்னரே விமானம் திருச்சிக்கு கிளம்பியது. விமானத்தின் பாதுகாப்பு மற்றும் 70 பயணிகளின் உயிரோடு விளையாடிய அந்த பயணியிடம், விளக்கக் கடிதம் பெற்றுக்கொண்டு அவரையும் அதே விமானத்தில் உடன் பயணிக்க அனுமதித்தது விமான நிர்வாகம்.

இந்த சம்பவம் தொடர்பாக டிசம்பர் இறுதியில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சூசகமாக ஒரு ட்வீட் பதிவிட்டு கவனம் ஈர்த்தார். அவரும் நேரிடையாக எவரையும் குறிப்பிடாதபோதும், சம்பவத்தில் தொடர்புடைய இருவரில் ஒருவர் பாஜக தலைவர் அண்ணாமலை என்பது வெளிப்பட்டது. ஊடகங்களின் புலனாய்வில் இரண்டாவது நபர் பெங்களூரு தெற்கு தொகுதியின் பாஜக மக்களவை எம்பி தேஜஸ்வி சூர்யா என்பதும், அவரே ஆர்வக்கோளாறில் அவசரகால திறப்பில் சேட்டை காட்டியவர் என்பதும் தெளிவானது. ஊடகங்கள் துருவ ஆரம்பித்ததும் விமான நிலையம், விமான நிறுவனம் உள்ளிட்டவை சம்பவம் தொடர்பாக வெளியிட்ட தகவல்களிலும், தேஜஸ்வியை நேரடியாக குறிப்பிடாது, ’ஒரு பயணி’ என்றே விளித்தன. நடந்த சம்பவம் தொடர்பாக, கடந்த வாரம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரே அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அம்பலத்துக்கு வந்தார்கள்.

திசை மாற்றிய போதை!

ஏர் இந்தியா விவகாரத்தில் சங்கர் மிஸ்ரா அநாகரீகத்தின் உச்சமாக நடந்துகொண்டதின் பின்னணியில் அவர் போதைக்கு ஆட்பட்டிருந்தது அப்போதே வெளிப்பட்டது. அந்த வகையில், ’குடிபோதையில் முறைகேடாக நடந்துகொள்வது, இன்னொருவரின் மானத்துக்கு களங்கம் விளைவிப்பது, பெண்ணை அவமரியாதை செய்வது’ உள்ளிட்ட குற்றவியல் சட்டங்கள் அடிப்படையில் சங்கர் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வரிசையில் பாலியல் வழக்கின் கீழும் அவர் மீது வழக்கு பதியப்பட வேண்டும் என பெண்ணிய அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன. அதுவரை போதையில் பிசகிவிட்டதாக சமாளித்த சங்கர் மிஸ்ராவின் சுயரூபம் அதன் பின்னர் வேறாக வெளிப்பட்டது.

நீதிமன்ற வழக்கு விசாரணையில், மூதாட்டி மீது சிறுநீர் கழித்தது தான் அல்ல என்று சாதித்த சங்கர் மிஸ்ரா, வயோதிகம் தொடர்பான ஆரோக்கிய குறைபாடுகள் காரணமாக மூதாட்டியே சிறுநீர் கழித்திருக்கக் கூடும் என்றும் சமாளிக்க ஆரம்பித்தார். சக பயணிகள், விமான சிப்பந்திகள் என நேரிடையான சாட்சிகள், மூதாட்டி உடனான வாட்ஸ் அப் தொடர்புகள், மன்னிப்பு கோரிய டிஜிட்டல் ஆவணங்கள் எனப் பலவும் தனக்கு எதிராக நின்றபோதும், துணிந்து பொய் சொல்லியிருக்கிறார் சங்கர் மிஸ்ரா. நாட்டின் பலவீனமான சட்டங்கள், அவற்றில் நிறைந்திருக்கும் ஓட்டைகள், விசாரணையை ஆண்டுக்கணக்கில் இழுக்க முடியும் என்ற பணபலம்.. எல்லாவற்றுக்கும் மேலான அதிகார தொடர்புகள் ஆகியவை சங்கர் மிஸ்ராவை கூச்சமின்றி பொய் சொல்ல வைத்திருக்கின்றன.

அதிகாரமும் ஒரு போதையே

சென்னை இன்டிகோ விமான விவகாரத்திலும் இதே அதிகார மிதப்பு, இன்னும் உச்சமாய் அரசியலின் பெயரால் வெளிப்பட்டது. தேசிய அளவில் தேஜஸ்வி சூர்யாவை காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் அண்ணாமலையை திமுகவும் பிலுபிலுவென பிடிக்க ஆரம்பித்த பின்னரே, இன்டிகோ விமானத்தை மையங்கொண்ட அரசியல் புயல் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பின்னரும் விமான நிலையம், விமான நிறுவனம் என சகலமும், தேஜஸ்வியின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடத் தயங்கின. பொதுவெளி அம்பலத்துக்குப் பின்னரும் தேஜஸ்வி சூர்யா அமைதி காத்தார். தேஜஸ்வியின் நண்பரும், இன்டிகோ விமானத்தில் உடன் பயணித்தவருமான அண்ணாமலையின் சமாளிப்புகள் அடடே ரகம்.

சம்பவத்துக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரியதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்த பிறகும், தேஜஸ்வி மீதான குற்றச்சாட்டை மறுத்து முட்டுகொடுத்து வந்தார் அண்ணாமலை. சமரசமற்ற அரசியல்வாதியாக தன்னை முன்னிறுத்த முயலும் அண்ணாமலைக்கு இதிலும் அடி சறுக்கியது. தன் வயதொத்த இளைஞர்களுக்கான முன்மாதிரியாக புகழ்பெற்று வரும், வளரும் அரசியல்வாதியான தேஜஸ்விக்கும் இந்த சம்பவம் கரும்புள்ளியாகி இருக்கிறது. கிளம்ப ஆயத்தமான விமானத்தில் நடத்திய சேட்டையை, ஆகாயத்தில் தேஜஸ்வி நிகழ்த்தியிருப்பின் என்னவாகியிருக்கும் என்ற பொதுமக்களின் கேள்வியிலும் நியாயம் இருக்கிறது.

தேஜஸ்வி சூர்யா - அண்ணாமலை
தேஜஸ்வி சூர்யா - அண்ணாமலை

நேபாள விமான விபத்தில் 72 பேர் பரிதாபமாக உயிரிழந்ததன், இந்திய எதிரொலி விவாதங்களில் ஒன்றாகவே சென்னை இன்டிகோ விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 70 சக பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான அஜாக்கிரதையில் அரசியல் அதிகாரத்தை பாய்ச்சி, உண்மையை மறைத்ததன் மூலமாக இரு இளம் அரசியல்வாதிகள் தங்கள் மதிப்பில் சறுக்கியிருக்கிறார்கள். சங்கர் மிஸ்ராவை ஆட்டுவித்தது மது போதை என்றால், பாஜக அரசியல்வாதிகளுக்கு அரசியல் அதிகார மிதப்பு கைகொடுத்திருக்கிறது.

இந்த இரு விமான சம்பவங்களிலும், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என்ன தவறிழைத்தார்கள் என்பது ஒரு பிரச்சினை என்றால், அவற்றை மறைக்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதே அடுத்தக்கட்ட விமர்சனங்களுக்கு அவர்களை ஆளாகச் செய்திருக்கிறது. சங்கர் மிஸ்ரா வழக்கு கூட, தனி நபரின் குற்றமாக சிறிய வட்டத்துக்குள் சுருங்கிவிடக் கூடியது. ஆனால் இன்டிகோ விமான விவகாரத்தில் பொதுவாழ்க்கையில் தீவிரமாக செயலாற்றும் இருவர், பலரது குறைகளையும் பிழைகளையும் பேசியே அரசியல் நடத்துவோர், அலட்சியத்தின் பேரில் தவறிழைத்ததும், அதனை அதிகாரத்தின் பெயரால் மறைக்க முயன்றதும் மக்களை முகம் சுழிக்கச் செய்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in