கண்டக்டர் டிக்கெட் கேட்டதால் ஆவேசம்: போதையில் அரசு பேருந்துகளை உடைத்த போதை வாலிபர் கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து பயணத்தின் போது நடத்துனரிடம் ஏற்பட்ட தகராறுக்கு பலி தீர்க்க, குடிபோதையில் இரு அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காட்டுப்புதூருக்கு நேற்று இரவு கடைசி பேருந்து கிளம்பிச் சென்றது. இந்தப் பேருந்தில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுமன்(23) என்பவர் தன் சகோதரியின் வீட்டிற்கு காட்டுப்புதூருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினார். அப்போது அவர் நடத்துனரிடம் ஆணும், பெண்ணும் சமம் தானே? நான் மட்டும் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும் என குடிபோதையில் தகராறு செய்தார்.
தொடர்ந்து பஸ் காட்டுப்புதூர் சென்று சேர்ந்ததும் சுமன் தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். ஆனால் இரவில் அவருக்கு கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறு நியாபகத்திற்கு வந்தது. அப்போது காட்டுப்புதூர் சந்திப்பில் நள்ளிரவில் இரு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு அதனுள் ஓட்டுநர், நடத்துனர் தூங்கிக் கொண்டு இருந்தனர். அங்குவந்த சுமன் இரு பேருந்துகளின் மீதும் கல்வீசி தாக்கினார். இதில் முன்பக்க கண்ணாடிகள் அப்பளம் போல் நொறுங்கியது. இருபேருந்துகளின் நடத்துனர்களும் இதுகுறித்து பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் காட்டுப்புதூர் ஊருக்குள் பதுங்கி இருந்த சுமனை போலீஸார் கைது செய்தனர்.
குடிபோதையில் ஆணும், பெண்ணும் சமம் தானே? என தத்துவம் பேசி அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் இருபேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய சம்பவத்தைக் கேட்டு போலீஸாரே தலைசுற்றிப் போயினர்.